
பெங்களூரு: மே 25-
நாடு முழுவதும் உள்ள வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் விலை உயர்வு மீண்டும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு மீண்டும் உயர்த்தியுள்ளது, இந்த மாற்றியமைக்கப்பட்ட விலைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. கடந்த 11 நாட்களில் விலை உயர்த்தப்படுவது இது நான்காவது முறை என்பதால் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்றைய மாற்றியமைக்கப்பட்ட விலை நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 2.61 ரூபாயும், டீசல் விலை 2.71 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை மேலும் அதிகரித்துள்ளது.
பெங்களூரில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110.61 ஆகவும், டீசல் விலை ரூ.98.54 ஆகவும் உயர்ந்துள்ளது.
டெல்லியில் பெட்ரோல் விலை 100 ரூபாய் எல்லையைத் தாண்டி, லிட்டருக்கு ரூ.102.12 ஆகப் பதிவாகியுள்ளது. டீசல் விலை ரூ.95.20 ஆக உள்ளது.
மும்பையில் பெட்ரோல் விலை ரூ.111.21 ஆகவும், டீசல் விலை ரூ.97.83 ஆகவும் உள்ளது.
கொல்கத்தாவில் பெட்ரோல் விலை ரூ.113.47 ஆகவும், டீசல் விலை ரூ.99.82 ஆகவும் பதிவாகியுள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை ரூ.107.77 ஆகவும், டீசல் விலை ரூ.99.55 ஆகவும் உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக எரிபொருள் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. மே 15 அன்று பெட்ரோல் விலை ரூ.3.25 மற்றும் டீசல் விலை ரூ.3.11 உயர்த்தப்பட்டது. அதன்பின், மே 19 அன்று பெட்ரோல் 99 பைசாவும், டீசல் 94 பைசாவும் உயர்ந்தது. மே 23 அன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தலா 95 பைசா அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, இன்று மீண்டும் ஒரு பெரிய விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து எரிபொருள் விலை உயர்ந்து வருவதால் போக்குவரத்து செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த இரண்டு வாரங்களுக்குள் நான்காவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்து முடக்கம் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 105 டாலரைக் கடந்து வர்த்தகமாகி வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள இறக்குமதிச் செலவினங்களைச் சமாளிக்க, எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மே 15 முதல் விலையேற்றத்தைத் தொடங்கின.
அதனைத் தொடர்ந்து மே 19, மே 23 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து விலையை உயர்த்திய நிறுவனங்கள், தற்போது 14 நாட்களுக்குள் நான்காவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளன.
இந்தத் தொடர் மாற்றங்களால் எரிபொருள் விலை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.46 உயர்ந்து ரூ.107.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.57 உயர்ந்து ரூ.99.55-க்கு விற்பனையாகிறது.
தலைநகர் டெல்லியில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டியுள்ளதுடன், டீசல் விலையும் 93 ரூபாயைக் கடந்துள்ளது. இதேபோல் மும்பை மற்றும் கொல்கத்தாவிலும் பெட்ரோல் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது
எண்ணெய் நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக எரிபொருட்கள் விலையை உயர்த்தாமல், படிப்படியாக உயர்த்தி வருகின்றன. இருப்பினும், இரண்டு வாரங்களில் அடுத்தடுத்து 4 முறை விலை உயர்த்தப்பட்டிருப்பது சாமானிய மக்களை முற்றிலுமாக பாதித்துள்ளது. இந்த தொடர் உயர்வால் காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து ஒட்டுமொத்த பணவீக்கம் அதிகரிக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.


















