
சென்னை: ஜூலை 26 –
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு, இதயத் துடிப்பை சீராக வைக்க உதவும், ‘பேஸ் மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலினுக்கு, 72, கடந்த, 21ம் தேதி காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டது. உடனே சிகிச்சைக்காக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவருக்கு சீரற்ற இதய துடிப்பு இருந்ததால், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இதய ரத்த நாள குழாயில் அடைப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய, நேற்று முன்தினம் ‘ஆஞ்சியோகிராம்’ பரிசோதனையும் செய்யப்பட்டது. இதில், பாதிப்பு எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து, முதல்வரின் இதயத் துடிப்பை சீராக வைக்க, ஹைதராபாத்தில் இருந்து வந்திருந்த, இதய மின்னியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் நரசிம்மன், ‘பேஸ் மேக்கர்’ கருவியை பொருத்தினார். ‘இக்கருவி முதல்வர் தன் அன்றாட நடவடிக்கைகளை, இன்னும் சிறப்பாக மேற்கொள்ள உதவும்; உடல்நிலையை சீராக வைக்க உதவும்’ என, டாக்டர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் தொடர் சிகிச்சை மற்றும் மருத்துவ கண்காணிப்பில் முதல்வர் ஸ்டாலின் உள்ளார். நள்ளிரவு சென்ற உதயநிதி முதல்வரின் மகனும், துணை முதல்வருமான உதயநிதி, நேற்று முன்தினம் நள்ளிரவு, போலீஸ் பாதுகாப்பின்றி, அரசு தனக்கு வழங்கியுள்ள காரில் மருத்துவமனைக்கு சென்றார். சில மணி நேரத்தில், வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். அப்போது, காரை அவரே ஓட்டிச் சென்றார். முதல்வர் உடல்நிலை குறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று கூறுகையில், ”முதல்வர் நலமுடன் உள்ளார். இன்று அல்லது நாளை வீடு திரும்புவார்,” என்றார்.