டெல்லி, டிச. 27- இந்தியாவில் சிறுபான்மை மக்களாக உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை சம்பவங்கள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் தான் நம் நாட்டில் முஸ்லிம் மக்கள்தொகை என்பது தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், 2050ம் ஆண்டில் உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள் வசிக்கும் நாடாக இந்தியா மாறும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் பல்வேறு மதங்களை மக்கள் பின்பற்றி வருகின்றனர். இதில் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து, புத்தம், ஜெயின், சீக்கியம் உள்ளிட்டவற்றை கூறலாம்.
இதுதவிர இன்னும் பல மதங்கள் உள்ளன. இதில் உலகில் அதிக மக்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வருகின்றனர். இதற்கு அடுத்து 2வதாக இஸ்லாம் மதத்தை மக்கள் பின்பற்றுகின்றனர். இந்நிலையில் தான் 2050ம் ஆண்டில் எந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் அதிகம் இருப்பார்கள்? என்பது பற்றிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த Pew Research Center என்பது அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இது ஒரு லாப நோக்கமற்ற ஒரு ஆராய்ச்சி அமைப்பாகும். உலக நாடுகளில் நிலவும் சமூக பிரச்சனைகள், பொதுமக்களின் கருத்துகள், மக்கள்தொகை குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. Pew Research Centre சார்பில் மக்கள்தொகை கணிப்பு 2010-2025 எனும் தலைப்பில் வெளியிடப்பட்டது. அதில் தான் தற்போது அதிக இஸ்லாமியர்கள் வசிக்கும் இந்தோனேசியாவை பின்னுக்கு தள்ளி இந்தியா தான் முதலிடம் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு நாட்டில் இருக்கும் மக்கள்தொகை மற்றும் அவர்களின் குழந்தை பெற்று கொள்ளும் திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகளவில் இஸ்லாமியர்களின் மக்கள்தொகை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு அந்த மக்களின் வயது மற்றும் குழந்தை பிறப்பு சதவீதம் தான் காரணமாகும். அதாவது தற்போது இஸ்லாமிய மக்கள்தொகை அடிப்படையில் அவர்களின் சராசரி வயது என்பது 22 ஆக உள்ளது. இது இந்துக்களுக்கு 26 வயது என்றும் என்றும், கிறிஸ்தவர்களுக்கு 28 வயது என்றும்உள்ளது இந்தியாவை பொறுத்தவரை முஸ்லிம் பெண்களில் குழந்தை பெற்றெடுப்பதன் சராசரி 3.2 என்ற அளவிலும், இந்து பெண்களிடம் 2.5 என்ற அளவிலும், கிறிஸ்தவர்களிடம் 2.3 சதவீதம் என்றும் உள்ளது. குழந்தை பெற்றெடுக்கும் சதவீதம் அதிகம் உள்ளதால் இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள்தொகை என்பது அதிகரிக்க வாய்ப்புள்ளது.
2010ம் ஆண்டு நிலவரப்படி இந்திய மக்கள்தொகையில் 14.4 சதவீதம் பேர் இஸ்லாமியர்களாக உள்ளனர். இது 2050ம் ஆண்டு 18.4 சதவீதமாக மாறும். இதன்மூலம் இஸ்லாமிய நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தான் அதிக இஸ்லாமியர்கள் வசிப்பார்கள். அதாவது தற்போது இந்தோனேசியாவில் தான் அதிக இஸ்லாமியர்கள் உள்ளனர். ஆனால் 2050ம் ஆண்டில் இந்தோனேசியாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.