வாஷிங்டன்: ஜூலை 8-
ஜப்பான், கொரியா உட்பட 14 நாடுகள் மீது 25 முதல் 40 சதவீதம் வரை வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். அதேநேரத்தில் அவர், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கு அமெரிக்கா நெருங்கிவிட்டது என அறிவித்து உள்ளார்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்து டிரம்ப் பல்வேறு நாடுகளுக்கு அதிக வரிகளை விதித்து வருகிறார். தினம் தினம் ஏதாவது ஒரு நாடுகளுக்கு வரி விதிப்பு அறிவிப்பை வெளியிட்டு டிரம்ப் பரபரப்பை கிளம்பி வருகிறார். அந்த வகையில் தற்போது, ஜப்பான், கொரியா உட்பட 14 நாடுகள் மீது 25 முதல் 40 சதவீதம் வரை வரிகளை விதித்து உள்ளார்.
அதன் விபரம் பின்வருமாறு:
- தென் கொரியா மீது 25% வரி
- ஜப்பான் மீது 25% வரி
- மியான்மர் மீது 40% வரி
- லாவோஸ் மீது 40% வரி
- தென்னாப்பிரிக்கா மீது 30% வரி
- கஜகஸ்தான் மீது 25% வரி
- மலேசியாவிற்கு 25% வரி
- துனிசியா மீது 25% வரி
- இந்தோனேசியா மீது 32% வரி
- போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா மீது 30% வரி * வங்கதேசம் மீது 35% வரி
- செர்பியா மீது 35% வரி
- கம்போடியா மீது 36% வரி
- தாய்லாந்து மீது 36% வரி
இந்த புதிய வரி விதிப்புகள் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். ஆகஸ்ட் 1ம் தேதி முதல், அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் எந்தவொரு ஜப்பான் மட்டும் கொரியா நாட்டு தயாரிப்புகளுக்கு 25% வரி விதிக்கப்படும். இந்த நாடுகள் அமெரிக்கா மீது மேலும் வரிகளை உயர்த்த விரும்பினால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரிகளுக்கு மேல் அதிக வரிகள் விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்து உள்ளார். - இது குறித்து டிரம்ப் கூறியதாவது: அமெரிக்காவிற்கு வர்த்தக பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த பற்றாக்குறை நமது பொருளாதாரத்திற்கும், உண்மையில், நமது தேசிய பாதுகாப்பிற்கும் ஒரு பெரிய அச்சுறுத்தலாகும். இருப்பினும், அமெரிக்காவிற்குள் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய முடிவு செய்தால், அவர்களுக்கு அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும். பல்வேறு நாடுகளுக்கு அவர்கள் எவ்வளவு வரிகள் செலுத்த வேண்டும் என்பதைத் தெரிவித்து நாங்கள் கடிதங்களை அனுப்பி வருகிறோம். சிலர் தங்களுக்கு இருக்கும் பிரச்னையை தெரிவித்தால், அதைப் பொறுத்து சிறிது சரிசெய்து கொள்ளலாம். நாங்கள் அதைப் பற்றி அநீதியாக இருக்கப் போவதில்லை. இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அவர், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கு அமெரிக்கா நெருங்கிவிட்டது என அறிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.















