இந்திய அணிக்கு பின்னடைவு.. காயத்தால் ஆல் ரவுண்டர் நிதிஷ் விலகல்

சிட்னி, அக். 25- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை ஏற்கனவே இழந்து தவிக்கும் இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இளம் ஆல்-ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டி, காயம் காரணமாக மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இந்த ஒருநாள் தொடரைத் தொடர்ந்து நடைபெறவுள்ள டி20 தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றுள்ள நிலையில், அவரது காயம் அணிக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சுப்மன் கில் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி, முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து தொடரை இழந்தது. தொடரை முழுமையாக இழக்கும் நோக்கில் இந்திய அணி சிட்னியில் களமிறங்கியது. காயத்தால் விலகிய நிதிஷ் குமார் ரெட்டி இந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் சர்வதேச அரங்கில் அறிமுகமானவர் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி. இந்நிலையில், அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, நிதிஷ் குமார் ரெட்டிக்கு இடது தொடையில் (Quadriceps) காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, சிட்னியில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் தேர்வில் அவர் பரிசீலிக்கப்படவில்லை. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது நிதிஷ் குமார் ரெட்டிக்கு இடது தொடையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் விளையாடமாட்டார். பிசிசிஐ மருத்துவக் குழு அவரது காயத்தை தினசரி அடிப்படையில் கண்காணித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.