Home செய்திகள் தேசிய செய்திகள் இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி – நாசிர் உசேன் பரிந்துரை

இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி – நாசிர் உசேன் பரிந்துரை

புதுடெல்லி: ஜூன் 6-
இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷியை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வைக்க இந்திய அணி நிர்வாகம் அதிக காலம் காத்திருக்கக் கூடாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நாசிர் உசேன் தெரிவித்துள்ளார்.
ஐ.சி.சி நேர்காணல் ஒன்றில் பேசிய நாசிர் உசேன், 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை வெகுவாகப் பாராட்டியுள்ளார். சமீபத்திய ஐ.பி.எல் தொடரில் வைபவ் படைத்த சாதனைகள், அவரை உலகளவில் அதிகம் பேசப்படும் இளம் கிரிக்கெட் வீரராக மாற்றியுள்ளது.
இதுகுறித்து நாசிர் உசேன் பேசுகையில், “உண்மையைச் சொல்வதானால், நான் ஐ.பி.எல் போட்டிகளை முழுமையாகப் பார்க்கவில்லை. ஆனால், சூர்யவன்ஷி விளையாடிய சில காட்சிகளைப் பார்த்தேன். என்ன ஒரு அசாத்தியமான திறமை!” என்று வியந்து கூறியுள்ளார்.
இந்த ஐ.பி.எல் சீசனில் இடதுகை தொடக்க ஆட்டக்காரரான சூர்யவன்ஷியின் சாதனைகள் பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தன. அவர் 16 போட்டிகளில் விளையாடி, 237.30 என்ற அசுரத்தனமான ‘ஸ்டிரைக் ரேட்’டில் 776 ரன்களைக் குவித்துள்ளார். குறிப்பாக, ஒரே தொடரில் 72 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ஐ.பி.எல் வரலாற்றுப் புத்தகத்தையே மாற்றி எழுதியுள்ளார். ஒரு ஐ.பி.எல் தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவே ஆகும். இந்த அசாத்தியமான ஆட்டத்திற்காக அவருக்கு ‘ஆரஞ்சு தொப்பி’ மற்றும் ‘மிக மதிப்புமிக்க வீரர்’ விருதுகளும் வழங்கப்பட்டன.
இந்த இளம் வீரரின் ஆட்டத்தை கிரிக்கெட் உலகின் மாபெரும் ஜாம்பவான்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, வைபவ் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட வேண்டும் என ஏற்கனவே பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார். அதேபோல், கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் இந்த இளம் வீரரின் பேட்டிங் நுணுக்கங்களையும், பயமற்ற ஆட்டத்தையும் சமீபத்தில் பாராட்டியிருந்தார்.
முன்பு ஒருமுறை நேரு கோப்பை போட்டியின் போது சச்சின் டெண்டுல்கரை முதன்முதலில் பார்த்த நினைவுகளை நாசிர் உசேன் இதனுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
“நான் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய ஆரம்பக் கட்டத்தில் நேரு கோப்பைப் போட்டி நடந்தது. அது பல ஆண்டுகளுக்கு முன்பு. அப்போது ஒரு சிறுவன் தனக்குச் சரிவரப் பொருந்தாத பெரிய பேட்களைக் கட்டிக்கொண்டு மைதானத்திற்குள் நுழைந்தான். அவனது பெயர் சச்சின் டெண்டுல்கர். அவனது ஆட்டத்தைக் கண்டு நான் வியந்து போனேன். இப்போது அதே சச்சின் டெண்டுல்கரே, சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைல் குறித்து ட்வீட் செய்து பாராட்டியுள்ளார். உங்களால் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்றோரை கவர முடிகிறது என்றால், நீங்கள் அனைவரையுமே கவர்ந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். வைபவ் சூர்யவன்ஷி ஒரு அற்புதம்” என்று நாசிர் உசேன் புகழாரம் சூட்டியுள்ளார்.