
சென்னை: ஜூன் 6-
அண்ணாமலையின் ராஜினாமாவை பாஜக தலைமை ஏற்றுக்கொண்ட நிலையில், புதிய அரசியல் இயக்கம் தொடங்குவதாக அவர் அறிவித்துள்ளார். இந்த இயக்கம், கட்சியாக மாறி, தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ளார். அவர் அறிவிப்பு வெளியிட்ட 10 மணி நேரத்தில் 10 லட்சம் உறுப்பினர்கள் அவரது இயக்கத்தில் சேர பதிவு செய்துள்ளனர்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிய அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதுதொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். கடந்த 1-ம் தேதி டெல்லி சென்ற அவர், பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
அதை ஏற்காத பாஜக, அமித் ஷா உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் மூலம் அண்ணாமலையை சமரசம் செய்ய முயன்றது.
இதற்காக, 4 நாட்களாக டெல்லியிலேயே முகாமிட்டிருந்தார். எனினும், பாஜகவில் இருந்து விலகும் திட்டத்தில் உறுதியாக இருந்த அவர், ஜூன் 5-ம் தேதி முடிவை அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் நேற்று காலை அறிவித்தார். இதைத் தொடர்ந்து, புதிய அரசியல் இயக்கம் தொடங்கும் அறிவிப்பை டெல்லியில் இருந்தவாறே அண்ணாமலை நேற்று மதியம் காணொலி வாயிலாக சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
‘‘இந்த இயக்கம், கட்சியாக மாறி, தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடும். நாம் அனைவரும் முட்டாள்தனமான அரசியலில் இருந்து வெளியே வர வேண்டும். சாமானிய மனிதருக்கான ‘காமன் மேன்’ அரசியலை முன்னிறுத்த வேண்டும். அனைவரையும் அரசியலுக்கு கொண்டு வரவும், அறம் சார்ந்த அரசியலை முன்னெடுக்கவும் பயிற்சி அளிக்கும் வகையில் கோவையில் அப்துல் கலாம் பெயரில் பயிற்சி மையம் தொடங்கப்படும். உள்ளாட்சித் தேர்தலுக்கு நிறைய வேட்பாளர்களை இங்கிருந்து நாம் அனுப்புவோம்’’ என்று அண்ணாமலை தெரிவித்தார்.


















