
மும்பை, ஆகஸ்ட் 6- இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இந்திய அணி வாஸ்லின் பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக (ball-tampering) பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷபீர் அகமது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்தச் சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது உளறலுக்கு இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்தும் வருகின்றனர். 4 ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி போட்டியில், 374 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி, ஹாரி ப்ரூக் மற்றும் ஜோ ரூட் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 301-3 என்ற வலுவான நிலையில் இருந்தது. அப்போது, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணாவின் அபார பந்துவீச்சால், இங்கிலாந்து அணி 367 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி 2-2 என்ற கணக்கில் தொடரைச் சமன் செய்தது. ஷபீர் அகமதின் குற்றச்சாட்டு இந்த போட்டியின் ஐந்தாவது நாளில், பழைய பந்து வழக்கத்திற்கு மாறாக அதிகமாக ஸ்விங் ஆனதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் சிலர் சந்தேகம் கிளப்ப முயன்று வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷபீர் அகமது, தனது எக்ஸ் (X) பக்கத்தில், “இந்திய அணி பந்தில் வாஸ்லின் (Vaseline) பயன்படுத்தியதாக நான் நினைக்கிறேன். 80 ஓவர்களுக்குப் பிறகும் பந்து புதியதுபோல் பளபளத்தது. நடுவர்கள் இந்தப் பந்தை ஆய்வகச் சோதனைக்கு அனுப்ப வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஓவல் ஆடுகளம் தொடர் முழுவதும் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாகவே இருந்தது. போட்டியின் ஐந்தாவது நாளில் கூட, பழைய பந்து நன்றாக ஸ்விங் ஆனது, இது பேட்டிங்கை மிகவும் கடினமாக்கியது. 80 ஓவர்களுக்குப் பிறகு புதிய பந்தை எடுக்கும் வாய்ப்பு இந்திய அணிக்கு இருந்தபோதிலும், பழைய பந்தே நன்றாக ஸ்விங் ஆனதால், அதையே தொடர்ந்து பயன்படுத்த முடிவு செய்தது. இந்த முடிவு அவர்களுக்கு பலனளித்தது.
ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலும், ஜஸ்பிரித் பும்ரா இரண்டு முக்கியமான போட்டிகளில் ஆடாத நிலையிலும், இந்திய அணி இந்த தொடரில் இங்கிலாந்துக்குக் கடும் சவால் அளித்தது.