Home செய்திகள் உலக செய்திகள் இந்தோனேசியாவில் பிராம்பனன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

இந்தோனேசியாவில் பிராம்பனன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

ஜகர்த்தா: ஜூலை 8-
இந்தோனேசியாவின் புகழ்பெற்ற சுமார் 1,0000 ஆண்டுகள் பழமையான ஹிந்து கோவிலான பிராம்பனன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன் இருநாட்டு உறவுகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்தியாவிடம் இருந்த பிரம்மோஸ் ஏவுகணை மற்றும் அஸ்ட்ரா வான்வழி ஏவுகணைகளை இந்தோனேசியாவுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருதான ‘பிந்தாங் அதிபூர்ணா’ என்ற விருதை அதிபர் பிரபோவோ சுபியான்டோ வழங்கி கவுரவித்தார்.
இந்த சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக, புகழ்பெற்ற பிராம்பனன் கோவிலுக்கு அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன் பிரதமர் மோடி சென்றார். இருவரும் ஹெலிகாப்டரில் செல்லும் போட்டோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், கோவிலின் அழகிய கோபுர அமைப்புகளை ஹெலிகாப்டரில் இருந்தபடி பிரதமர் மோடி ரசித்தார். கோவிலுக்குள் அந்நாட்டு அதிபர் மற்றும் அதிகாரிகளுடன் சென்ற பிரதமர் மோடி, சுவாமிகளுக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டார். ஜாவா தீவில் அமைந்துள்ள இந்த கோவில் 9ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட ஹிந்து கோவிலாகும். சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளுக்காக கட்டப்பட்ட இந்த கோவிலின் பராமரிப்பு பணியில் இந்திய தொல்லியல் துறை இந்தோனேஷியாவுக்கு பேருதவி செய்துள்ளது. 40 ஹெக்டேர் பரப்பில் 240 சன்னதிகளுடன் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது. இந்த கோவில், உலக கலாசார பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.