
ராவல்பிண்டி, டிச. 2- மாஜி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்துவிட்டதாகக் கடந்த சில நாட்களாகச் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு பாகிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்த பிறகும் கூட அங்குக் குழப்பம் தீரவில்லை. இதற்கிடையே இன்று ராவல்பிண்டி சிறையில் மிகப் பெரிய ஒரு போராட்டத்தை நடத்த இம்ரான் கான் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் மாஜி பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இவர் 2018 முதல் 2022 வரை நான்கு ஆண்டுகள் பாகிஸ்தான் பிரமதராக இருந்தார். இருப்பினும், அப்போது கூட்டணிக் கட்சிகளே திடீரென ஆதரவை விலக்கிக் கொண்டதால் இவரது ஆட்சி சரிந்தது. அடுத்து அமைந்த ஷெரீப் அரசு இவருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தது. இம்ரான் கான் ஊழல் வழக்குகளில் இம்ரான் கான் கடந்த 2023ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இம்ரான் கான் மீது பல்வேறு ஊழல் புகார்கள் முன்வைக்கப்பட்ட நிலையில்,
2023 முதலே இம்ரான் கான் சிறையில் தான் இருந்து வருகிறார். இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களாக இம்ரான் கான் உயிரிழந்துவிட்டதாகச் செய்திகள் பரவின. சிறையில் வைத்து இம்ரான் கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் சீக்ரெட்டாக சிறையில் இருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டதாக எல்லாம் தகவல்கள் பரவின. இதனால் அவரது பிடிஐ கட்சி ஆதரவாளர்களும் பொதுமக்களும் பதறிப் போனார்கள்.
பாகிஸ்தான் சிறை நிர்வாகமும், அந்நாட்டு அரசும் இம்ரான் கான் உடல்நிலை குறித்துப் பரவும் வதந்திகளை மறுத்தாலும் கூட இதை அங்குள்ள பொதுமக்கள் நம்பவில்லை. இதற்கிடையே இன்று இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ள ராவல்பிண்டி சிறைக்கு முன்பு மிக பெரிய போராட்டத்தை நடத்த பிடிஐ கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். தடை உத்தரவு இந்த போராட்டத்தை முறியடிக்கும் வகையில், ராவல்பிண்டியில் மக்கள் கூடுவதைத் தடை செய்ய 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை வரை இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

















