
மும்பை: ஜூலை 8- ‘சமண சமூகத்தினர் ஒன்பது நாட்கள் கொண்டாடும், ‘பர்யுஷன் பர்வ்’ காலத்தில் இறைச்சி கடைகளுக்கு தடை விதித்தால், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி பண்டிகைகளின் போது பிற சமூகத்தினரும் மனு தாக்கல் செய்வர்’ என, மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
‘பர்யுஷன் பர்வ்’ என்பது சமண சமூகத்தினரால் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகை. ஒன்பது நாட்கள் நடக்கும் இந்த ஆன்மிக பண்டிகையில், தங்களின் தவறுகளை நினைத்து சமணர்கள் வருந்துவர்; மேலும், மற்றவர்கள் செய்த தவறையும் மன்னிப்பர்.
கடந்த ஆண்டு இந்த பண்டிகையின் போது, மஹாராஷ்டிராவின் மும்பை, நாசிக், புனே உள்ளிட்ட மாவட்டங்களில், இறைச்சி கடைகள் செயல்பட ஒரு நாள் மட்டும் தடை விதிக்கப்பட்டது.
இந்தாண்டுக்கான பண்டிகை அடுத்த மாதம் 21ல் துவங்கவுள்ள நிலையில், மும்பை, நாசிக், புனேவில், பண்டிகை கொண்டாடப்படும் ஒன்பது நாட்களும் இறைச்சி கடைகளை மூடக் கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில் சமண சமூகத்தினர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:
ஒன்பது நாட்களுமே இறைச்சி கடைகளை மூட வேண்டும் என, கேட்கிறீர்கள். உங்களுக்கு அனுமதி வழங்கினால், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி பண்டிகைகளின் போது, பிற சமூகத்தினரும் நாளை இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு தாக்கல் செய்வர்.
இது குறித்து, ஆக., 18க்குள் மும்பை, புனே உள்ளிட்ட மாநகராட்சிகள் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.