Home விளையாட்டு இலங்கை சுழலை சமாளிக்குமா இந்திய அணி?

இலங்கை சுழலை சமாளிக்குமா இந்திய அணி?

காலே, ஆகஸ்ட் 15- இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு, இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு கடும் சவால்தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் அங்கமாக உள்ளது. இதனால் இந்தத் தொடர் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. நடப்பு, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணி இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என சமன் செய்திருந்தது. அதன் பின்னர் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக 2-0 என வென்றிருந்தது. அதேவேளையில் கடந்த நவம்பர் மாதம் சொந்த மண்ணில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி முழுமையாக தென் ஆப்பிரிக்காவிடம் இழந்திருந்தது. அதன் பின்னர் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணி டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி 4 வெற்றி, 4 தோல்வி, ஒரு டிரா என 48.15 சதவீத புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.