
பெங்களூர்: ஆக. 15-
பெங்களூரு நகரில் சாலைப் பள்ளங்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ‘கிரேட்டர் பெங்களூரு அதிகார அமைப்பிற்கு’ (ஜி.பி.ஏ.) கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த விஜயன் மேனன் என்பவர், நகரில் சாலைப் பள்ளங்களை மூடக் கோரியும், ராஜகால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி விபு பக்ரு மற்றும் நீதிபதி கே.எஸ்.ஹேமலேகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது ஜி.பி.ஏ. சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “கடந்த 2026 ஏப்ரல் மாதம் முதல் இதுவரை நகரில் மொத்தம் 10,202 சாலைப் பள்ளங்கள் அடையாளம் காணப்பட்டு, அவை சீரமைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன” என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், “வெறும் புள்ளிவிவரங்களை மட்டும் நீதிமன்றத்தில் வழங்கக் கூடாது. சாலைப் பள்ளங்கள் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கு மாநகராட்சி பின்பற்றும் குறிப்பிட்ட நடைமுறை என்ன? ஒவ்வொரு ஆண்டும் பள்ளங்களை மூடவும், சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கவும் எடுக்கப்படும் நடவடிக்கைகள், கண்டறியப்பட்டு சீரமைக்கப்பட்ட பள்ளங்களின் முழுமையான விவரங்கள் மற்றும் சாலைப் பள்ளங்களால் ஏற்பட்ட விபத்து மரணங்கள், காயமடைந்த சம்பவங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள எப்.ஐ.ஆர். (F.I.R) விவரங்கள் ஆகியவற்றை விரிவான அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர். மனுதாரர் விஜயன் மேனன் கடந்த 2015-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், “முக்கிய சாலைகளில் உள்ள பள்ளங்களை மூட வேண்டும், மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், சாலைப் பணிகளுக்கான ஒப்பந்த விவரங்களை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிட வேண்டும் மற்றும் சாலைப் பள்ளங்களால் விபத்தில் சிக்குபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும்” என்று கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.













