
வாஷிங்டன், ஜூன் 26- அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இடையே பல ஆண்டுகளாக நல்லுறவு இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் போர், அமெரிக்கா- ஈரான் போர் காலங்களில் இந்த உறவு பாதிக்கப்பட்டதாம். குறிப்பாக இஸ்ரேலை மிகக் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கும் அளவுக்கு டிரம்ப் கோபமடைந்ததாக ரிப்போர்ட்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் மேகி ஹேபர்மேன் மற்றும் ஜொனாதன் ஸ்வான் ஆகியோர் அதிபர் டிரம்ப் தொடர்பாகப் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் டிரம்பின் இரண்டாவது அதிபர் பதவிக்காலம் மற்றும் உலகத் தலைவர்களுடன் அவர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்த விவகாரங்கள் உள்ளன. அப்படி தான் இஸ்ரேலுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தை குறித்த விவரங்களும் அதில் இருக்கிறது. பிரஷர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடத்திய தொலைப்பேசி உரையாடலின் போது, ஹமாஸ் அமைப்புடன் போர்நிறுத்த உடன்பாட்டை ஏற்குமாறு கடுமையாகப் பேசியதாகவும், மிகவும் கடுமையாக அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.. ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த வேளையில், இந்த உரையாடல் நடைபெற்றதாக அந்தப் புத்தகம் கூறுகிறது. கத்தாரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்புக்கும் இடையிலான பதற்றம் தீவிரமடைந்தது. அதாவது அங்கு ஹமாஸ் அமைப்பின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கலீல் அல்-ஹய்யா மற்றும் அவரது மகன் உள்ளிட்ட குழுவினர் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஒரு தற்காலிக போர்நிறுத்தத்தை ஏற்படுத்த டிரம்ப் தீவிரமாக முயன்று வந்த நிலையில், இஸ்ரேலின் இந்த ராணுவ நடவடிக்கை தற்போதைய அமைசி பேச்சுவார்த்தை முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதாக டிரம்ப் கடும் கோபமடைந்தார். இதனையடுத்து நெதன்யாகுவுடன் பேசிய டிரம்ப், இஸ்ரேலின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் தனது விரக்தியை வெளிப்படுத்தியதோடு, போர்நிறுத்த முன்மொழிவை ஏற்குமாறு வலியுறுத்தினார்.





















