ஈரானில் பாஸ்மதி அரிசி – தேயிலை இனி கிடைக்காது

டெஹ்ரான்: ஜனவரி 14
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் நம் நாட்டுக்கு எந்த மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்பது பற்றி அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் ஈரான் மக்கள் விரும்பி உண்ணும் இந்திய பாஸ்மதி அரிசி மற்றும் இந்திய தேயிலை ஏற்றுமதி அங்கு கிடைக்காது என்ற சூழல் உருவாகி உள்ளது. அதோடு இந்திய பாஸ்மதி அரிசி, தேயிலை ஏற்றுமதியாளர்கள் புதிய மார்க்கெட்டை தேடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரானும், நம் நாடும் நல்ல நட்பில் உள்ளன. ஆனால் ஈரானும், அமெரிக்காவும் எதிரிகளாக இருக்கின்றன. ஈரானை முடக்க அமெரிக்கா தொடர்ந்து வேலை செய்து வருகிறது. கடந்த ஆண்டு இஸ்ரேல் – ஈரான் மோதியது. அப்போது ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதாக கூறி அணுசக்தி மையங்களில் அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அதன்பிறகும் மோதல் தொடர்ந்து வருகிறது.தற்போது ஈரானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றன. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு வழங்கி உள்ளார். அதுமட்டுமின்றி ஈரானை தணிமைப்படுத்த டிரம்ப் விரும்புகிறார். அதன்படி ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன. இதனால் தான் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்படியான சூழலில் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் வெளிநாடுகளை தடுத்து நிறுத்தும் செயலை வரி விதிப்பின் மூலமாக டிரம்ப் முன்னெடுத்துள்ளார். இது ஈரானுக்கு பெரிய சிக்கலாக பார்க்கப்படுகிறது. நம் நாடும் கணிசமான அளவுக்கு ஈரானுடன் வர்த்தகம் செய்து வருகிறது. ஏற்கனவே டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டனர். இப்படியான சூழலில் நட்பை தாண்டி ஏற்றுமதியாளர்களின் நலனை பாதுகாக்க வேண்டிய நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் டிரம்பின் புதிய 25 சதவீத வரி மிரட்டல் நம் நாடும் அந்த வர்த்தகத்தை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் நம் நாட்டில் உள்ள பாஸ்மதி அரிசி மற்றும் தேயிலை ஏற்றுமதியாளர்கள் நேரடியாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அதாவது கடந்த 2024-25 நிதியாண்டில் ஈரான் – இந்தியா இடையே 1.68 பில்லியன் டாலருக்கு வர்த்தகம் நடந்தது. இது நம் நாட்டின் மொத்த வர்த்தகத்தில் 0.15% ஆக இருந்தது. குறிப்பாக நம் நாட்டில் இருந்து ஈரானுக்கு 1.24 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் பிரதானமான பொருள் என்னவென்றால் அது பாஸ்மதி அரிசி தான்.