
டெல்லி: ஜனவரி 13-
ஈரானில் போராட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் அரசுக்கு பிரஷர் போடும் வகையில் டிரம்ப் புதிய வரிகளை அறிவித்தார். அதாவது ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி விதிக்கப்படுவதாக அவர் அறிவித்தார். அமெரிக்க அதிபரின் இந்த அதிரடி உத்தரவால் யாருக்குப் பாதிப்பு அதிகம்.. இதன் பின்னணி குறித்து விரிவாகப் பார்க்கலாம். ஈரான் நாட்டில் கடந்த சில காலமாகவே போராட்டங்கள் உச்சத்தில் இருக்கிறது. அங்குள்ள கமேனி அரசுக்கு எதிராக மக்கள் வீதிக்கு வந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். கிட்டத்தட்ட எல்லா மாகாணங்களிலும் போராட்டங்கள் உச்சக்கட்டத்தில் இருக்கிறது. போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
டிரம்ப் வரி இதற்கிடையே அமைதியான முறையில் போராடுவோர் மீது ஈரான் வன்முறையைப் பயன்படுத்துவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது. இதற்கிடையே ஈரானுக்கு பிரஷர் போடும் வகையில், அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரியை விதிக்கப் போவதாக அதிபர் டிரம்ப் இப்போது தடாலடியாக அறிவித்துள்ளார். இது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இப்போது ஈரானுடன் மிக அதிகளவில் வர்த்தகம் செய்யும் நாடாக சீனாவே இருக்கிறது. இதனால் வரி அமலுக்கு வரும்போது சீனா அதிகம் பாதிக்கப்படும். அதேநேரம் இந்தியா, ஐக்கிய அமீரகம், துருக்கி போன்ற நாடுகளும் ஈரானுடன் கணிசமான அளவுக்கு வர்த்தகம் செய்கின்றன. இதனால் டிரம்பின் இந்த உத்தரவால் இந்தியா உட்பட இந்த நாடுகளும் பாதிக்கப்படும்.
இந்தியாவுக்கு பாதிப்பு 2024-25 நிதியாண்டில் மட்டும், ஈரானுக்கு $1.24 பில்லியன் மதிப்பிலான சரக்குகளை இந்தியா ஏற்றுமதி செய்தது. $0.44 பில்லியன் மதிப்பிலான சரக்குகள் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான மொத்த வர்த்தகம் $1.68 பில்லியன் (சுமார் ₹14,000 – ₹15,000 கோடி) ஆகும். இந்தியா ஈரான் வர்த்தகத்தில் அதிகபட்சமாகக் கரிம ரசாயனங்கள் ($512.92 மில்லியன்) இருக்கிறது. அதைத்தொடர்ந்து பழங்கள், நட்ஸ் ஆகியவை ($311.60 மில்லியன்), கனிம எரிபொருள்கள் ($86.48 மில்லியன்) ஆகியவை முதன்மையாக உள்ளதாக டிரேடிங் ஈகோனாமிக்ஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கனவே ரஷ்யக் கச்சா எண்ணெய்யை வாங்குவதாகச் சொல்லி அமெரிக்கா 50% வரியை விதித்துள்ளது. இதனால் இந்தியா அமெரிக்கா வர்த்தகம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் சரக்குகள் கடுமையாகச் சரிந்துள்ளது. இந்தச் சூழலில் மேலும் 25% வரி விதிக்கப்பட்டால் அது நிலைமையை மோசமாக்கவே செய்யும் என அஞ்சப்படுகிறது.


















