Home செய்திகள் உலக செய்திகள் ஈரான் புதிய அமைதி ஒப்பந்தம்

ஈரான் புதிய அமைதி ஒப்பந்தம்

டெஹ்ரான்: ஏப்ரல் 27-
அமெரிக்கா ஈரான் இடையே நிலவி வரும் பதற்றமான சூழலைத் தணிக்கும் வகையில், ஈரான் புதிய சமாதான ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவிடம் முன்மொழிந்துள்ளது. பாகிஸ்தானின் மத்தியஸ்தம் மூலம் இந்தத் தூதுச் செய்தி அமெரிக்காவைச் சென்றடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா ஏற்குமா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை.
ஈரான் வழங்கியுள்ள இந்த புதிய சமாதான ஒப்பந்தத்தில் பின்வரும் மூன்று முக்கியமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன:

  1. ஹோர்முஸ் நீரிணைப்பைத் மீண்டும் திறத்தல்
    உலகளாவிய எரிபொருள் போக்குவரத்தில் மிக முக்கியமான பாதையான ஹோர்முஸ் நீரிணைப்பு தற்போது மூடப்பட்டுள்ளதால் சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாகத் திறந்து, எரிபொருள் விநியோகத்தைச் சீர்படுத்த ஈரான் முன்வந்துள்ளது.
  2. போர் நிறுத்தம் மற்றும் அமைதி உடன்படிக்கை
    தற்போது நடைமுறையில் இருக்கும் தற்காலிகப் போர் நிறுத்தத்தை நீண்ட காலத்திற்கு நீட்டிக்க அல்லது நிரந்தர சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளது.
  3. அணுசக்தி திட்டப் பேச்சுவார்த்தையைத் தள்ளிவைத்தல்
    தங்கள் நாட்டின் அணுசக்தித் திட்டம் குறித்த விவாதங்களை உடனடியாக நடத்தாமல், அதற்கு முன்பாக ஹோர்முஸ் நீரிணைப்பைத் திறக்க வேண்டும் மற்றும் அமெரிக்கா விதித்துள்ள கடல்சார் தடைகளை நீக்க வேண்டும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ளது. இதற்குப் பிறகே அணுசக்தி குறித்த அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் எனத் தெரிவித்துள்ளது.
    வெள்ளை மாளிகையின் பதில்:
    இது குறித்து வெள்ளை மாளிகையின் ஊடகத் தொடர்பாளர் ஒலிவியா வேல்ஸ் கூறுகையில், “இது போன்ற மிகவும் நுணுக்கமான ராஜதந்திர விவகாரங்களை ஊடகங்கள் வாயிலாக விவாதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் நலன்களுக்குப் பாதிப்பு இல்லாத ஒப்பந்தங்களை மட்டுமே நாங்கள் பரிசீலிப்போம். எக்காரணம் கொண்டும் ஈரான் அணு ஆயுதம் ஏந்துவதை அமெரிக்கா அனுமதிக்காது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
    டொனால்ட் ட்ரம்ப் கருத்து:
    சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரை பாகிஸ்தானுக்கு அனுப்ப இருந்த திட்டத்தை ரத்து செய்திருந்தார். “ஈரான் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், அவர்கள் எங்களுக்கு நேரடியாக ஒரு அழைப்பு விடுத்தாலே போதும்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
    ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் ரஷ்யா சென்று அதிபர் புதினைச் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.
    சர்வதேச எரிபொருள் நெருக்கடிக்கு இந்த ஒப்பந்தம் ஒரு தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அணுசக்தி விவகாரத்தைத் தள்ளிப்போடும் ஈரானின் திட்டத்தை அமெரிக்கா ஏற்குமா என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட நகர்வுகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.