
அங்காரா: ஜூலை 9-
ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 3 கப்பல்கள் மீது ஈரான் திடீரென தாக்குதல் நடத்தியதால், அந்த நாட்டின் 80 இடங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. ‘‘ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்துவிட்டது. ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது வீணானது’’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். இதனால் வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் – அமெரிக்கா இடையே கடந்த மாதம் 17-ம் தேதி போர் நிறுத்தம் தொடர்பான அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் 14 அம்சங்கள் இடம்பெற்றன. இரு தரப்பு போர் நிறுத்தம், கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு, ஈரான் மீதான தடைகள் நீக்கம் உட்பட 14 அம்சங்கள் அமைதி ஒப்பந்தத்தில் இடம்பெற்றன.
இதையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தி கப்பல் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. எனினும், ஈரான் கடலோர பகுதியில் உள்ள வழித்தடத்தில்தான் செல்ல வேண்டும், ஓமன் கடற்கரையை ஒட்டி ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்றால் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தது.
இந்நிலையில், மார்ஷல் தீவு எண்ணெய் கப்பல் அல் ரெஹாயத், சவுதி கப்பல் வெட்யான், லைபீரியா கப்பல் சைப்ரஸ் ப்ராஸ்பெரிட்டி ஆகிய 3 எண்ணெய் கப்பல்கள் ஓமன் கடற்கரையை ஒட்டி ஹார்முஸ் ஜலசந்தியை நேற்று முன்தினம் கடந்தன. அவற்றின் மீது ஈரான் ராணுவத்தினர் திடீரென தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடியாக ஈரானின் துறைமுக நகரங்கள் பந்தர் அப்பாஸ், சிரிக், கேஷ்ம்ப் தீவு உட்பட 80 இடங்களில் அமெரிக்கா நேற்று முன்தினம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் வான் பாதுகாப்புக் கருவிகள், ரேடார் மையங்கள், ஏவுகணை தளங்கள், 60-க்கும் மேற்பட்ட கடற்படை படகுகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவ கட்டுப்பாட்டு மையம் சென்ட்காம் தெரிவித்தது. அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக பஹ்ரைன், குவைத் மற்றும் இதர வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்க துருக்கி நாட்டின் அங்காராவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வந்துள்ளார். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர், “ஈரானுடனான போர் நிறுத்தம் முடிந்துவிட்டதா? அமைதிக்கான 14 அம்ச ஒப்பந்தம் வீண்தானா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதாவது: என்னைப் பொறுத்த வரை, ஈரானுடன் சண்டை நிறுத்தம் முடிந்துவிட்டதாக நினைக்கிறேன். ஈரான் தலைவர்கள் மனநோயாளிகள், தீயவர்கள், வன்முறையாளர்கள். அவர்களிடம் ஏதோ தவறு உள்ளது. ஈரான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் தொடர்ந்து நடத்தட்டும். ஆனால், அவர்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள். கமேனியின் ஈமச்சடங்கை நடத்துவதற்குப் பதிலாக, எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். அதனால் நேற்று முன்தினம் நாங்கள் ஈரானை கடுமையாகத் தாக்கினோம். மீண்டும் கடுமையாகத் தாக்க திட்டமிட்டுள்ளோம். கார்க் தீவை கைப்பற்றவும் திட்டமிட்டுள்ளோம். ஹார்முஸ் ஜல சந்தியை நாங்கள் மீண்டும் முற்றுகையிடலாம். அங்கு கண்ணிவெடிகளை அகற்ற நேட்டோ நாடுகள் போர்க் கப்பல்களை அனுப்புகின்றன. இவ்வாறு அதிபர் ட்ரம்ப் கூறினார்.


















