Home மாவட்டங்கள் பெங்களூர் விபத்தில் ராணுவ வீரர் பலி

விபத்தில் ராணுவ வீரர் பலி

மங்களூர்: ஜூலை 9-
மங்களூர் அருகே உள்ள கே.பி.டி சந்திப்பு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பைக் விபத்தில், சி.ஐ.எஸ்.எஃப் ராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கடபா தாலுகா கொய்லா பகுதியைச் சேர்ந்த சீதாராம கவுடா (47) என்ற ராணுவ வீரர், தற்போது ஜம்மு மத்திய சிறையில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் விடுமுறையில் சொந்த ஊரான சூரத்கல் அருகேயுள்ள பெர்முதேவிற்கு வந்திருந்தார்.
இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்காக, தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க பைக் மூலம் கடபா சென்றிருந்தார். அங்கு வேலையை முடித்துவிட்டு மீண்டும் பெர்முதே நோக்கி பைக் ஓட்டி வந்தபோது, கே.பி.டி சந்திப்பைத் தாண்டி எச்.கே.எஸ் அடுக்குமாடி குடியிருப்பு அருகே பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது
கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் (டிவைடர்) பயங்கரமாக மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக ஏ.ஜே. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
விபத்துக்கான துல்லியமான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து கத்ரி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ராணுவ வீரருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.