
வாஷிங்டன்: பிப்ரவரி 14-
47 ஆண்டுகளுக்கு மேலாக ஈரான் பேசிக்கொண்டே இருக்கிறது. இதுவரை ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை என்றும் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியவில்லை என்றால் அது ஈரானுக்கு மோசமான நாளாக மாறும் என்று டிரம்ப் கூறியிருந்த நிலையில் மத்திய கிழக்கு நோக்கி அமெரிக்காவின் இரண்டாவது போர்க்கப்பல் நகரத்தொடங்கியுள்ளது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளன. இதனால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் இருக்கலாம் என ஈரான் குற்றம் சாட்டி வருகிறது. இது ஒருபக்கம் இருக்க ஈரானில் போராட்டக்காரர்கள் மீது கடுமையான அடக்குமுறைகள் ஏவப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானை மீண்டும் எச்சரித்துள்ளார். இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பிறகு பேசிய டிரம்ப், ‛‛ஈரான் எங்களுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய சூழலில் ஓர் ஒப்பந்தம் மிக அவசியம் தேவையாக உள்ளது. விமானம் தாங்கி கப்பலை அனுப்ப இருக்கிறோம் இல்லாவிட்டால் கடுமையான மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும். இது ஈரானுக்கு மிகவும் வேதனையை அளிக்கும். அத்தகைய சம்பவத்தை செய்யநான் விரும்பவில்லை. அவர்கள் ஒப்பந்தம் செய்ய மறுத்தால் நிலைமை முற்றிலுமாக மாறிவிடும்.
47 ஆண்டுகளாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இதுவரை எந்த ஒப்பந்தமும் போடவில்லை. விரைவில் மத்திய கிழக்கிற்கு இரண்டாவது விமானம் தாங்கி கப்பலை அனுப்ப இருக்கிறோம்” என்றார். போர் ஏற்படும் பதற்றம் டிரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்த சில மணி நேரங்களில் அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஒன்று மத்திய கிழக்கை நோக்கி நகர தொடங்கியுள்ளது. ஏற்கனவே, அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் ஆப்ரஹாம் லிங்கன் போர்க்கப்பல் ஈரானுக்கு அருகே அரேபிய கடலில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நோக்கி நகர்த்தப்படும் யு.எஸ்.எஸ்.எஸ் ஜெரால்டு ஆர்.போர்டு விமானம் உலகின் உலகின் மிகப்பெரிய விமானத் தாங்கி கப்பல் ஆகும். கரீபியன் பகுதியில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி செல்ல தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வெனிசுவேலாவை சுற்றி இந்த Ford carrier strike group கப்பல் கடந்த சில மாதங்களாக கரீபியன் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. இதை மத்திய கிழக்குக்கு மாற்றுவது, தற்போது மத்திய கிழக்கு நோக்கி நகர்த்தப்படுவது அமெரிக்காவின் போர்திறனை வலுவாக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால், ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
















