ஈரான் வன்முறையில் போலீஸ்காரர் சுட்டுக்கொலை; பலி 36 ஆக அதிகரிப்பு

டெஹ்ரான்: ஜனவரி 7-
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் போலீஸ்காரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுவரை நடந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அங்கு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சியான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்தது. பணவீக்கத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. ஈரானில் அரசுக்கு எதிராக வியாபாரிகள், பொதுமக்கள், மாணவர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர்.
பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. அந்த வகையில், டெஹ்ரானில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. பாதுகாப்பு படையினர், போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.
அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. அப்போது போராட்டக்காரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் காரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஈரான் போராட்டம் தொடங்கியதில் இருந்து இதுவரை 36 பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இதில் 18 வயதுக்குட்பட்டவர்கள் 5 பேர் அடங்குவர். தொடர்ந்து பணவீக்கத்தால் விலைவாசி உயர்ந்து வருவது அந்நாட்டு மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.