மதுரை: ஆகஸ்ட் 22-
நாமக்கல் சிறுநீரக திருட்டு புகாரையடுத்து, தற்போதுள்ள உடல் உறுப்பு மாற்று ஒப்புதல் குழுவை கலைத்துவிட்டு, புதிய குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. பரமக்குடியைச் சேர்ந்த சத்தீஸ்வரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் விசைத்தறித் தொழிலாளர்கள், ஏழை தொழிலாளர்களின் சிறுநீரகங்கள் திருடப்பட்டுள்ளன.இருப்பினும் சிறுநீரகத் திருட்டு தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினருக்கு தொடர்புள்ளது. இதனால் மாநில போலீஸார் விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, சிறுநீரக திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஊரக சுகாதாரச் சேவைகள் இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், “சிறுநீரகத் திருட்டு தொடர்பாக தமிழ்நாடு சுகாதார சேவைத் திட்ட இயக்குநர் வினித் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. பெரம்பலூர் தனலட்சுமி னிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சி கேத்தார் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆனந்தன், ஸ்டான்லி மோகன் ஆகிய இரு தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் வழங்கும் ஒப்புதல் குழு இனிவரும் காலங்களில் முறையாக வீடியோ பதிவு செய்யவும், முறைகேட்டில் தொடர்புடைய அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஒப்புதல் குழு கலைக்கப்பட்டு புதிய குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், “சிறுநீரகத் திருட்டு குற்றச்சாட்டை முறையாக விசாரிக்க வேண்டும். சட்டவிரோதமாக உடல் உறுப்புகளை விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம்” என்று தெரிவித்தனர்.
தனியார் மருத்துவமனை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “உடல் உறுப்பு விற்பனையில் மருத்துவமனையின் பங்கு இல்லை. உடல் உறுப்பு தானத்துக்கு ஒப்புதல் வழங்கும் குழு அனுமதி வழங்கினால் மட்டுமே உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை நடைபெறுகிறது” என்றார்.















