உலகின் சக்திவாய்ந்த கடற்படை! இந்தியாவை மிஞ்சிய குட்டி நாடுகள்

டெல்லி, ஜன. 16- உலகின் சக்திவாய்ந்த கடற்படைகள் குறித்த 2026 ஆம் ஆண்டுக்கான புதிய தரவரிசையை World Directory of Modern Warships and Submarines (WDMMW) அமைப்பு வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 40 நாடுகளின் கடற்படைகளை ஆய்வு செய்து தயாரிக்கப்பட்ட இந்த பட்டியலில், இந்தியா முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், சீனா தனது செல்வாக்கை மேலும் வலுப்படுத்தியுள்ளதோடு, பாகிஸ்தானும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் சக்திவாய்ந்த கடற்படைகள் குறித்த வெறும் கப்பல்களின் எண்ணிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படவில்லை. மாறாக, ஒவ்வொரு நாட்டின் கடற்படையும் எதிர்கால போர்களை எதிர்கொள்ளும் திறன், நவீனமயமாக்கல் திட்டங்கள், தாக்குதல் மற்றும் பாதுகாப்பு திறன், நீண்ட கால நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தளவாட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக WDMMW “True Value Rating” எனப்படும் மதிப்பீட்டு முறையை பயன்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது. உலகில் எந்த நாட்டுக்கும் இல்லாத அளவிற்கு சக்திவாய்ந்த கடற்படையைக் கொண்ட அமெரிக்காவிடம் 11 விமான தாங்கி கப்பல்கள் உள்ளன. 2026 கடற்படை தரவரிசை உலகின் எந்த மூலையிலும் குறுகிய நேரத்தில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் அமெரிக்க கடற்படைக்கு உள்ளது. அதனுடைய தொழில்நுட்ப முன்னேற்றம், அணு சக்தி கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் உலகம் முழுவதும் பரந்துள்ள கடற்படை தளங்கள் ஆகியவை அதன் முதலிடத்தை உறுதிப்படுத்துகின்றன. அமெரிக்காவுக்கு அடுத்ததாக சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஒரு தசாப்தத்தில் சீனா தனது கடற்படையை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. சில வகை கப்பல்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை விட கூட அதிகமாக சீனாவிடம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.இருப்பினும், ஒட்டுமொத்த போர்திறன், அனுபவம் மற்றும் உலகளாவிய செயல்பாட்டு திறன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சீனா இரண்டாம் இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு கடும் சவாலாக சீனா மாறும் என ராணுவ நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த தரவரிசையில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்தியாவை விட முதல் இடங்களில் இந்தோனேசியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த நாடுகள் தங்களின் கடற்படைகளை நவீனமயமாக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.