உ.பி. கோயிலில் குரங்குகள் அட்டகாசத்தால் கூட்ட நெரிசல்: 2 பேர் பலி

லக்னோ: ஜூலை 28 –
உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கியில் அவஸனேஸ்வர் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலியாகினர்.
உ.பி. மாவட்டம் பாரபங்கியில் அவசனேஸ்வர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் ஷ்ரவன் மாதத்தில் இக்கோயிலில் சிவனுக்கு நீரால் அபிஷேகம் செய்யும் வேண்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில் ஜலாபிஷேகத்துக்காக இன்று காலை அதிகளவில் பக்தர்கள் கூடியிருந்தனர். அப்போது, சில குரங்குகள் மின்சார வயரை சேதப்படுத்தியுள்ளன. மின் ஒயர் அறுந்து தகர கூடாரத்தின் மீது விழுந்தது. இதனால் கோயிலில் தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் அச்சத்தில் அங்குமிங்கும் சிதறி ஓடியுள்ளனர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 2 பேர் பலியாகினர். 29 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், மீட்புப் பணிகளை முடுக்கிவிட உத்தரவிட்டுள்ளார். விபத்துப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்த பாராபங்கி ஆட்சியர் சஷாங் திரிபாதி, “குரங்குகள் அட்டகாசம் காரணமாகவே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை நடைபெறுகிறது.” என்றார்.
முன்னதாக நேற்று உத்தராகண்டின் மானஸா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர். அந்தச் சோகம் அடங்குவதற்குள் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அதேபோல், கடந்த ஜனவரியில் உத்தரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜில் நடந்த மகா கும்ப மேளாவில் 30 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.