எச்1பி விசா திட்டத்தையே ரத்து செய்கிறதா அமெரிக்க – மசோதா தாக்கல்

அமெரிக்கா: பிப்ரவரி 11-
அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் வெளிநாட்டில் இருக்கக்கூடிய நிபுணர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு விசா திட்டம் தான் ஹெச்1பி (H1B) விசா. இந்த திட்டத்தில் அமெரிக்காவில் வேலை செய்பவர்களில் கிட்டத்தட்ட 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள். அந்த வகையில் ஹெச்1பி விசா திட்டத்தில் கொண்டுவரக்கூடிய எந்த ஒரு மாற்றமும் இந்திய தொழில்நுட்ப வல்லுனர்களை பெருமளவில் பாதிக்க செய்கிறது.
டிரம்ப் நிர்வாகம் ஏற்கனவே விசா வழங்குவதில் பல்வேறு கெடுபிடிகளை கடைப்பிடித்து வருகிறது. விசா வேண்டி விண்ணப்பம் செய்பவர்களின் சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும் , கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவராக இருந்தால் அவரின் விசாக்களை ரத்து செய்யலாம் என அறிவித்திருக்கிறது.
இதனால் அமெரிக்க தூதரகங்கள் ஹெச்1பி விசா விண்ணப்பங்களை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவதற்கு வழக்கத்தை விட கூடுதலாக கால அவகாசம் எடுத்துக் கொள்கின்றன. பல மாதங்கள் வரை விண்ணப்பதாரர்கள் காத்திருக்கும் சூழல் உண்டாகி இருக்கிறது. இந்த சூழலில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஹெச்1பி விசா திட்டத்தை முழுவதுமாக நிறுத்த வேண்டும் என ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. குடியரசு கட்சி எம்பி கிரேக் ஸ்டியூப் EXILE ACT என்ற பெயரில் ஒரு மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார். அதில் அமெரிக்க நிறுவனங்கள் ஹெச்1பி விசா நடைமுறையை தவறாக பயன்படுத்துகின்றனர் என கூறியிருக்கிறார். குறைந்த சம்பளத்தில் வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை வரவழைத்து வேலை வாங்குகிறார்கள் இதனால் அமெரிக்க குடிமகன்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் போகிறது என கூறியிருக்கிறார்.
அமெரிக்கா குடிமகன்களின் நலன்களையும் தேசிய நலன்களையும் கருத்தில் கொள்ளாமல் ஹெச்1பி விசா திட்டத்தை நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துகின்றன என அவர் கூறியிருக்கிறார். இந்த விசா மூலம் இங்கே வருகை தரக்கூடிய வெளிநாட்டவர்களால் அமெரிக்காவிலேயே பயின்ற ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை என்கிறார். அமெரிக்காவில் மருத்துவம் பயின்ற பத்தாயிரம் மருத்துவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை அதற்கு மாற்றாக வெளிநாட்டில் இருந்து 5000 மருத்துவர்களை வரவழைத்து நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்திருக்கின்றன எனக் கூறியிருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனம் 16,000 அமெரிக்கர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டு ஹெச்1பி விசாவில் 9 ஆயிரம் பேரை வரவழைத்து வேலைக்கு அமர்த்தி இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.