சென்னை: ஜூலை 28 –
சீனாவில் பிறந்த நாள் உடைக்கு ஏற்றவாறு உடல் எடையை குறைக்க 2 வாரங்களுக்கு காய்கறிகளையே சாப்பிட்ட 16 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர் பரூக் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா கூறியிருப்பதாவது: சீனாவில் உள்ள ஹூனான் மாகாணத்தில் 16 வயதுடைய வளர் இளம் சிறுமி ஒருவர் பிறந்தநாளுக்கு ஒரு உடுப்பு எடுத்துள்ளார். அந்த உடுப்புக்குள் உடல் சரியாக பொருந்த வேண்டும் என்பதற்காக இரண்டு வாரங்களாக தினமும் கொஞ்சம் காய்கறிகளும்கூடவே வயிற்றுப் போக்கைத் தூண்டக்கூடிய மாத்திரைகளையும் உட்கொண்டு வந்துள்ளார். திடீரென ஒரு நாள் கால்களில் வலு சிறிதும் இல்லாமல் கீழே விழ, மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடனடியாக அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்தத்தில் பொட்டாசியம் அளவுகள் அபாயகரமான அளவு குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது.
இதன் விளைவாக தசைகள் மற்றும் நரம்புகள் இயக்க முடக்கம் ஏற்பட்டு சுவாச செயலிழப்பு மற்றும் இதய முடக்கம் ஏற்படும்
நிலை வரை கொண்டு சென்றுள்ளது. எனினும் சரியான நேரத்தில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டதால் அவருக்கு பொட்டாசியம் வழங்கப்பட்டு உயிர் பிழைத்திருக்கிறார்.
உணவில் மாவுச்சத்து + புரதச்சத்து + கொழுப்புச் சத்து + நுண்சத்துகளான வைட்டமின்கள் + தாது உப்புகளான மினரல்கள் ஆகியவை மொத்தமும் அடங்கியிருப்பதே சமச்சீர் உணவாகும்.ஒருவேளை நீங்கள் உடல் எடை குறைக்க விரும்பி மாவுச்சத்தைக் குறைத்தால் கொழுப்புச் சத்தை தேவையான அளவு கூட்ட வேண்டும். ஒரு போதும் தேவையான புரதச் சத்து உட்கொள்ளலில் கைவைக்கலாகாது. இதனால் ஏற்கனவே உடல் நீரிழிப்பு – தாது உப்பு குறைபாடு ஆகியவற்றிற்கு தள்ளப்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில்எடையைக் குறைக்கிறேன் என பேதி ஆகும் மாத்திரைகளை வேறு உட்கொள்ளும் போது அபாய அளவு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுஉடலில் உள்ள தாது உப்புகள் வெளியேறும்.குறிப்பாக பொட்டாசியம் அளவுகள் குறைந்தாலும் கூடினாலும் ஆபத்து தான். பொட்டாசியம் என்பது நமது தசைகள் இறுக்கமாவதற்குத் தேவை. நரம்புகள் வழியாக சமிக்ஞைகள் கடத்தப்படுவதற்குத் தேவை. இவை அளவில் குறைந்தால் கை கால் செயலிழந்து பக்கவாதம் போன்ற நிலை ஏற்படும்.















