
மும்பை, பிப். 13- ஐசிசி டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பை வான்கடே மைதானதில் ‘சி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நேபாளம் – இத்தாலி அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நேபாளம் 19.3 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஆஃரிப் ஷெய்க் 27, கேப்டன் ரோஹித் பவுடெல் 23, ஆசிப் ஷெய்க் 20, கரண் 18 ரன்கள் சேர்த்தனர்.
இத்தாலி அணி தரப்பில் கிரிஷான் கலுகமகே 3, பென் மனென்டி 2 விக்கெட்கள் வீழ்த்தினர். ஜே ஜே ஸ்மட்ஸ், அலி ஹசன், ஜஸ்பிரீத் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். நேபாளம் அணி தனது கடைசி 5 விக்கெட்களை 9 ரன்களுக்கு தாரை வார்த்தது. 124 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இத்தாலி 12.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. சகோதரர்களான அந்தோனி மோஸ்கா 32 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 62 ரன்களும் ஜஸ்டின் மோஸ்கா 44 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 60 ரன்களும் விளாசினர். ஆட்ட நாயகனாக கிரிஷான் கலுகமகே தேர்வானார். 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அறிமுக அணியான இத்தாலிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. சகோதர ஜோடி சாதனை
நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலி அணியின் சகோதரர்களான ஜஸ்டின் மோஸ்கா, அந்தோணி மோஸ்கா முதல் விக்கெட்டுக்கு 124* ரன்கள் குவித்தனர். இது டி20 உலகக் கோப்பைகளில் சகோதரர்களுக்கு இடையேயான அதிகபட்ச ரன்கள் ஆகும். இந்த வகையில் கடந்த 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் சகோதரர்களான கம்ரன் அக்மல், உமர் அக்மல் ஜோடி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 96 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்ததே சாதனையாக இருந்தது. இதை தற்போது மோஸ்கா சகோதரர்கள் முறியடித்துள்ளனர். மீதம் இருந்த 44 பந்துகள்டி 20 உலகக் கோப்பை தொடரில் நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலி அணி 44 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்றது. டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் ஓர் அணி அதிக பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெறுவது இது 3-வது நிகழ்வாகும். இதற்கு முன்னர் 2024-ம் ஆண்டு தொடரில் அமெரிக்காவுக்கு எதிராக மேற்கு இந்தியத் தீவுகள் 55 பந்துகளை மீதம் வைத்தும், 2021-ம் ஆண்டு தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 50 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்தன.



















