
மஸ்கட்: டிசம்பர் 19-
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா – ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதன்மூலம் இந்தியா ஏற்றுமதி செய்யும் 99 சதவீத பொருட்களுக்கு அந்நாட்டில் வரிரத்தாகிறது. அங்கிருந்து இறக்குமதியாகும் 95 சதவீத பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று முன்தினம் ஓமன் சென்றார்.
அவரது முன்னிலையில் இந்தியா – ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஓமன் வர்த்தக அமைச்சர் குவாயிஸ் பின் முகமது அல் யூசப் கையெழுத்திட்டனர்.இதன்மூலம் இந்தியா ஏற்றுமதி செய்யும் ஜவுளி, பிளாஸ்டிக் பொருட்கள், பர்னிச்சர்கள், மருந்துப் பொருட்கள், மருத்துவக் கருவிகள், வாகனங்கள் உள்ளிட்ட 99 சதவீத பொருட்களுக்கு ஓமனில் அடுத்த ஆண்டு முதல் வரி ரத்தாகிறது. அதேபோல, ஓமனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழம், பளிங்கு கற்கள், பெட்ரோ ரசாயனப் பொருட்கள் உட்பட 95 சதவீத பொருட்களுக்கான இறக்குமதி வரியை இந்தியா குறைத்துள்ளது.ஓமனில் இருந்து ஆண்டுக்கு 2 ஆயிரம் டன்பேரீச்சம்பழங்களை வரியின்றி இறக்குமதி செய்து கொள்ளலாம்.இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், இந்தியா – ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒப்பந்த நிகழ்ச்சிக்கு பிறகு, இந்திய வம்சாவளியினர், தொழிலதிபர்களை பிரதமர் மோடி சந்தித்தார். அவர் பேசியதாவது: தீபாவளிப் பண்டிகையை யுனெஸ்கோ தனது கலாச்சார பட்டியலில் இணைத்துள்ளது. இனி நம்தீபம் உலகையே ஒளிரச்செய்யும்.


















