கச்சத்தீவை தரமாட்டோம்: இலங்கை அமைச்சர் உறுதி

கொழும்பு, ஜூலை 5- “கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத்தரும் எண்ணம் இல்லை,” என இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் கூறியுள்ளார்.நமக்கும், அண்டை நாடான இலங்கைக்கும் இடையே மீனவர் பிரச்னை தொடர்கதையாக உள்ளது. கச்சத்தீவு மற்றும் பாக் நீரிணை அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்கிறது. படகுகளை பறிமுதல் செய்கிறது. சில சமயங்களில் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடக்கின்றன. இதில், தற்போது இலங்கை வசம் உள்ள மக்கள் வசிக்காத கச்சத்தீவு, கடந்த 1974ல் பிரதமராக இருந்த இந்திராவின் காங்கிரஸ் ஆட்சியில், கடல்சார் ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்டது. கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழக கட்சிகள் தொடர்ந்து கோரி வருகின்றன. ‘மீன்பிடி உரிமைகளை விட்டுத் தந்ததே தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்னைக்கு காரணம்’ என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறி வருகிறார். இந்நிலையில், மீனவர் பிரச்னை குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத், “மீனவர் பிரச்னையை தீர்க்க நாங்கள் துாதரக அளவிலான பேச்சுக்கு தயாராக உள்ளோம். ‘’ஆனால், இலங்கையின் கச்சத்தீவை விட்டுக் கொடுக்க ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்பது உறுதி. அது, சர்வதேச சட்டத்தால் நிறுவப்பட்டது,” என கூறினார்.