
புதுடெல்லி, ஜன. 12- டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல உணவு விடுதிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் கட்டாய சேவைக் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் உள்ளன.
இவற்றில் 27 உணவகங்களுக்கு அந்த தொகையத் திருப்பித்தரக் கூறி மத்திய நுகர்வோர்ப் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி, மும்பை, பாட்னா உள்ளிட்ட நகரங்களின் பல உணவு விடுதிகளில் உணவருந்தியவர்களிடம் கூடுதலாகக் கட்டாயமாக சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுபோல், மொத்தம் 27 உணவு விடுதிகள் மீது மத்திய அரசாங்கத்தின் உதவி எண் மூலம் தேசிய நுகர்வோர் உதவி மையத்திற்கு புகார்கள் அனுப்பப்பட்டன. இவை நுகர்வோர் புகார்களாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின்(சிசிபிஏ) விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சிசிபிஏ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மொத்தம், 27 உணவகங்களுக்கு எதிரான புகார்களைத் தாமாக முன்வந்து சிசிபிஏ வழக்குப் பதிவு செய்தது. காரணம், கட்டாய சேவைக் கட்டணம் வசூலிப்பது ஒரு நியாயமற்ற வர்த்தக நடைமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.


















