கண்டதேவி கோவில் தேரோட்டம்

தேவகோட்டை: ஜூலை 8-
சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேர் இழுத்துச் செல்கின்றனர்.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆனி தேரோட்டம் என்பது சிறப்பு வாய்ந்த ஒன்று. இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்னையில் 1998ம் ஆண்டு தேரோட்டம் நின்றது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் 2002 முதல் 2006 வரை தேரோட்டம் நடைபெற்றது.
அதன் பின்னர், ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு கடந்தாண்டு தேரோட்டம் நடைபெற்றது.இந்த ஆண்டு ஆனி திருவிழா ஜூன் 30ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இன்று தேரோட்டம் தொடங்கி உள்ளது.
தேரோட்டத்தை ஒட்டி, கிட்டத்தட்ட 2000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜாதிரீதியான அடையாளங்கள், ஆடைகள் அணியக்கூடாது, வெள்ளை நிற வேட்டி, சட்டை மட்டுமே அணிய வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.