காந்திநகர்: ஜூலை 10 – குஜராத் மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் தனது குழந்தையையும், கணவரையும் காப்பாற்றக்கோரி கதறிய காட்சிகள் நெஞ்சை உலுக்கியுள்ளன. இது தொடர்பான வீடியோ பரவலாக ஷேராகி வருகிறது. வதோதரா மாவட்டத்தின் பத்ரா எனும் பகுதியில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது. இதனால் பாலத்தின் மேல் சென்றுக்கொண்டிருந்த வாகனங்கள் மஹிசாகர் ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், “பயங்கர சத்தத்துடன் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. அடுத்த சில விநாடிகளில் பாலத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இரண்டு லாரி, ஒரு கார் சில பைக்குகள் பாலத்தில் இருந்து கீழே விழுந்தன” என்று கூறியுள்ளனர்.
இந்த வீடியோவை பாலத்தின் மேல் இருந்த மக்கள் எடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் உங்களை மீட்க பேரிடர் மீட்பு படையினர் வந்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அந்த பெண்ணுக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், மீட்பு படையினர் வருவதற்குள் அப்பெண்ணின் குழந்தையும், கணவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டனர். முதலில் அப்பெண்ணை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள், பின்னர் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு, அவரது குழந்தை மற்றும் கணவரை சடலமாக மீட்டிருக்கின்றனர். உயிருக்கு போராடிய குழந்தையையும், கணவரையும் காப்பாற்ற கதறிய பெண்ணின் வீடியோ பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்தில் உயிர் தப்பிய பெண்மணி, ‘சோனல்பென்’ என அடையாளம் காணப்பட்டிருக்கிறார். 35 வயதான இவர் தனது குடும்பத்தினர் 7 பேருடன் காரில் பாவ்நகரில் பிரார்த்தனைக்கு சென்றுக்கொண்டிருந்ததாகவும் வழியில் இந்த விபத்தில் சிக்கியதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த விபத்து குறித்து அவர் கூறுகையில், Also Read குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்து விபத்து.. பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு! தேடுதல் பணிகள் தீவிரம் “நாங்கள் பிரார்த்தனைக்கு சென்றுக்கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்தது. அப்போது அதிகாலை 6.30 மணி இருக்கும். நான் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தேன். கார் ஆற்றில் விழுந்த போது என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. நான் எப்படியோ வாகனத்திலிருந்து வெளியே வந்துவிட்டேன். ஆனால், எங்கள் காரின் மீது பின்னால் வந்த லாரி விழுந்துவிட்டது. எனவே காரில் இருந்தவர்களால் வெளியே வர முடியவில்லை. ஒரு மணி நேரமாக நான் உதவிக்கு போராடினேன். யாரும் வரவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.















