Home செய்திகள் உலக செய்திகள் கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை

கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை

இஸ்லாமாபாத், ஜூன் 2- பாகிஸ்தானின் பொருளாதார மையமாகவும், அந்நாட்டின் மிகப் பெரிய நகரமாகவும் விளங்கும் கராச்சி தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப் பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. கோடை வெயில் சுட்டெரிக்கும் சூழலில், அடிப்படைத் தேவைகளான குடிநீர், மின்சாரம் மற்றும் எரிவாயு ஆகிய மூன்றும் கிடைக்காமல் கோடிக்கணக்கான மக்கள் திண்டாடி வருகின்றனர். பாகிஸ்தானின் தலைநகராக என்ன தான் இஸ்லாமாபாத் இருந்தாலும் அந்நாட்டின் முக்கிய பொருளாதார மையம் என்றால் அது கராச்சி தான். பாகிஸ்தானின் முக்கிய பொருளாதார மையமாக இருக்கும் கராச்சியில் கடந்த சில காலமாகவே நிலைமை மோசமாக இருக்கிறது. சுட்டெரிக்கும் கோடை வெயிலால் அங்குக் குடிநீர், மின்சாரம் மற்றும் சிலிண்டர் கூட முறையாகக் கிடைக்காமல் மக்கள் திணறி வருகிறார்கள். முடக்கம் நகரெங்கும் நிலவும் இந்தத் தட்டுப்பாடு சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை முற்றிலும் முடக்கிப் போட்டுள்ளது. பாகிஸ்தானின் நிதித் தலைநகராகக் கருதப்படும் கராச்சியில், அத்தியாவசியச் சேவைகள் சீர்குலைந்துள்ளதால் மக்கள் தெருவில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நகருக்கு வழங்கப்பட வேண்டிய குடிநீரில் தினமும் சுமார் 5.4 கோடி கேலன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கராச்சியின் நீர் மற்றும் கழிவுநீர்க் கழகம் தெரிவித்துள்ளது.. இதற்கு மிக முக்கியமான காரணம், கராச்சியின் வடகிழக்கு நீரேற்று நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் முக்கிய கேபிளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு ஆகும். இதனால் விநியோகக் கட்டமைப்பு முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது மே 31 அதிகாலை 3:27 மணியளவில் வடகிழக்கு கராச்சி நீரேற்று நிலையத்திற்குச் செல்லும் மின்சாரம் திடீரெனத் துண்டிக்கப்பட்டது. இது கே-II நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகளை முடக்கி, நகரின் பல பகுதிகளுக்குச் செல்லும் குடிநீர் விநியோகத்தை முழுமையாகப் பாதித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கே-II நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் பிரதான கேபிளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இந்தத் தட்டுப்பாட்டிற்குக் காரணம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.