
நாகர்கோவில்: மே 18 –
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருப்பதால் கோடை சீஸன் களைகட்டியுள்ளது. சூரிய உதயத்தை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.
சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு நேற்று கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமானோர் திரண்டனர். சூரியன் உதயமான காட்சியை கண்டு ரசித்தனர். சூரிய உதயம் தெளிவாக தென்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தனர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.
காலையில் 7 மணிக்கு படகு சேவை தொடங்கிய நிலையில் ஆவலுடன் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டனர். கண்ணாடி இழை கூண்டு பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்த்தனர். சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் காலையில் இருந்தே கூட்டம் நிரம்பி வழிந்தது.

















