
புதுடெல்லி: ஜூலை 25-
மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் மநீம தலைவர் கமல்ஹாசன். தமிழில் உறுதிமொழி ஏற்று ராஜ்யசபா எம்.பியாக இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளார் கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
கமல்ஹாசன், இன்று நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றுள்ளார். வெள்ள சட்டை, கருப்பு நிற பேண்ட் அணிந்து நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த கமல்ஹாசன், தமிழ் மொழியில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். “மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமல்ஹாசன் எனும் நான், சட்டத்தினால் நிறுவப்பெற்றதான இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன் என்றும் நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும், விழுமிய முறைமையுன் உறுதிகூறுகிறேன். வணக்கம்” என உறுதி எடுத்து, பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார் கமல்ஹாசன். நாடாளுமன்றத்தில் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற மநீம தலைவர் கமல்ஹாசனை வாழ்த்தி அவரது கட்சியினர் #கமல்ஹாசன்எனும்நான் என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்