
கும்பகோணம்: ஜூன் 22-
விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க வேளாண்மைத் துறை அமைச்சருக்கு நேரமில்லை என்பது வேதனை அளிப்பதாக கரும்பு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாபநாசம் வட்டம் திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2022, நவ.30-ம் தேதி முதல் 1,300-வது நாளாக கரும்பு விவசாயிகள் போராடி வருகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியது: வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருமண்டங்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவிவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவித்தார். ஆனால், அவர் அப்படி யாரையும் அழைக்கவில்லை. அவரது உதவியாளரை நாங்கள் தொடர்பு கொண்டபோது, ‘அமைச்சர் மிகவும் பிசியாக’ இருப்பதாக தெரிவித்தார்.
வேளாண்மைத் துறை அமைச்சருக்கு, விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்க நேரம் இல்லை என்பது வேதனையாக உள்ளது. பேச்சுவார்த்தை நடத்த கரும்பு விவசாயிகளை அழைத்ததாக பொய் கூறியுள்ள அமைச்சர் வினோத், எந்த விவசாயியிடம் பேசினார் என்ற விவரத்தை வெளியிட வேண்டும். இல்லையெனில், பொய் பேசியதற்காக காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


















