சென்னை: ஜனவரி 27-
பிளாஸ்டிக் கவர்களில் சூடான டீ, காபி, சாம்பார் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவதால், கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் விரிவாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில், பிளாஸ்டிக் கவர்களில் சூடான டீ, காபி, சாம்பார் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவதால், பிளாஸ்டிக் கவர் தயாரிப்புக்கு பயன்படும் ‘பிஸ்பினால்-ஏ’ எனும் மைக்ரோ பிளாஸ்டிக் வேதித் துகள்கள் கர்ப்பிணியின் நஞ்சுக்கொடி வழியாக கருப்பைக்குள் சென்று கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தனியார் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதையடுத்து மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு ‘மைக்ரோ பிளாஸ்டிக்’ தாக்கம் உள்ளதா என்பது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சகம், தமிழக அரசின் சுகாதாரத்துறைச் செயலர், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் உள்ளிட்டோர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் ஏற்கெனவே உத்தரவிட்டனர்.















