கர்நாடகப் பெண்ணுக்குபுது வகை ரத்தம்

கோலார்: ஜூலை 31 உலகில் வேறு யாருக்கும் இல்லாத புதிய ரத்த வகை, கோலாரின் 38 வயது பெண்ணுக்கு இருப்பது தெரிய வந்துள்ளது.
கர்நாடக மாநிலம், கோலாரைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர், கடந்த ஆண்டு இதய நோயால், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய அறுவை சிகிச்சைக்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவரது ரத்த வகை, ‘ஓ பாசிட்டிவ்’ என, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஆனால், அப்பெண்ணின் ரத்தத்தை பரிசோதித்த போது, அதன் வகை குறித்து தெளிவாக தெரியவில்லை. அவசர நிலையை உணர்ந்த டாக்டர்கள், வேறு வழியின்றி மிகுந்த எச்சரிக்கையுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இதற்கிடையில், அவரது ரத்த மாதிரிகள் பெங்களூரு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. அங்கும் அவரது ரத்த வகை புதுமையாக இருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து, அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பிரிட்டனின் பிரிஸ்டல் நகரில் உள்ள ஐ.பி.ஜி.ஆர்.எல்., எனும் சர்வதேச ரத்தப்பிரிவு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.