
பெங்களூரு: ஜூலை 19-
‘ஆன்லைன்’ பரிவர்த்தனைகளை கணக்கிட்டு ஜி.எஸ்.டி., நோட்டீஸ் அனுப்பப்பட்டதால், தங்கள் கடைகளில் உள்ள, ‘கியூ.ஆர்., கோடு ஸ்கேனர்’களை வணிகர்கள் அகற்றி வருகின்றனர்.
ஆனால், ‘கூகுள் பே, போன் பே’ உள்ளிட்ட யு.பி.ஐ., செயலிகளை பயன்படுத்தாவிட்டாலும், ஆண்டு வருமானம் 40 லட்சம் ரூபாயை தாண்டினால் ஜி.எஸ்.டி.,யை வணிகர்கள் கட்டாயம் செலுத்த வேண்டும்’ என வணிக வரித்துறை அதிரடியாக தெரிவித்துள்ளது.
பெங்களூரில் உள்ள பேக்கரி, காய்கறி, பால், சிகரெட், குட்கா கடை வைத்திருப்பவர்களில் ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக விற்பனை; 20 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வியாபாரம் செய்யும் அழகு நிலையங்கள், மசாஜ் சென்டர்கள், சலுான் உள்ளிட்டவை நடத்துவோரும் ஜி.எஸ்.டி., செலுத்தும்படி, 14,000 வியாபாரிகளுக்கு வணிக வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இவர்களில் பெரும்பாலானோருக்கு, 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வரி விதிக்கப்பட்டது. இதை பார்த்த வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.போன் பே, கூகுள் பே உள்ளிட்ட யு.பி.ஐ., செயலிகளின் வாயிலாக பெறப்பட்ட தொகையை அடிப்படையாக வைத்தும், 2021 முதல் 2024 வரை நடந்த ஆன்லைன் பரிவர்த்தனைகளை கணக்கிட்டும் வரி விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த வியாபாரிகள், வணிக வரித்துறை அதிகாரிகள் மீது கோபம் அடைந்தனர். நகரில் உள்ள பல வியாபாரிகள், தங்கள் கடைகளில் உள்ள கியூ.ஆர்., கோர்டு ஸ்கேனர்களை அகற்றியுள்ளனர். அத்துடன் ‘கூகுள் பே, போன் பே கிடையாது; பணம் மட்டுமே பெறப்படும்’ என அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளனர். இதனால், ‘தங்கள் வியாபாரம் குறைந்தாலும், அதிக வரி செலுத்துவதிலிருந்து தப்பிக்க முடியும்’ என, கருதுகின்றனர்
இந்த வரி விதிப்பை கண்டித்து, வரும் 23, 24 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுதும் பால், பேக்கரி, சிகரெட், மளிகை கடைகள் மூடப்படும் எனவும், 25ம் தேதி கடைகளை மூடிவிட்டு சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் கர்நாடக மாநில தொழிலாளர் கவுன்சில் தெரிவித்துள்ளது. இவர்களின் போராட்டத்தால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்குமா என மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
ஆண்டு வருமானம், 1.50 கோடி ரூபாய்க்கு குறைவாக உள்ள வியாபாரிகள், ஜி.எஸ்.டி., பதிவு செய்து, சமரச வரி முறையை தேர்வு செய்து வரி செலுத்தலாம். இதன் மூலம், மாநில அரசுக்கு 0.50 சதவீதமும் மத்திய அரசுக்கு 0.50 சதவீதமும் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும். இந்த முறையில் வரி சலுகைகள் கிடைக்கும்.
இதுவரை, மாநிலத்தில் 98,915 வணிகர்கள் பதிவு செய்து, சமரச வரியின் கீழ் வரி செலுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.