
புதுடெல்லி: ஜூன் 6-
நீட் (NEET-UG) தேர்வு வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ (CBSE) தேர்வு மதிப்பீட்டு முறைகேடுகள் மற்றும் ஜேஇஇ (JEE Advanced) மாணவர்களின் தரவுகள் ஆன்லைனில் கசிந்தது போன்ற தொடர் கல்வித்துறை குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்திய, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எனும் அமைப்பின் சார்பில் இன்று டெல்லியில் போராட்டம் நடைபெற இருக்கிறது.
தொடக்கத்தில் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. போராட்டம் நடக்கும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
தர்மேந்திர பிரதானுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றுள்ள இளைஞர்கள், அம்பேத்கர், பகத்சிங், சாவித்ரிபாய் பூலே உள்ளிட்டோரின் படங்களை கையில் ஏந்தியுள்ளனர். போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றிருக்கும் நிலையில், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியினர் முழக்கம்.
மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி போராட்டம்: டெல்லி ஜந்தர் மந்தர் போராட்ட களத்திற்கு வந்தடைந்தார் கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனர் ஆப்ஜித் தீப்கே
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தலாம் என்று கூறியுள்ள டெல்லி காவல்துறை, இதற்கான அனுமதி முறைசார்ந்த விதிவிலக்காக வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
காலை 10 மணிக்கு கரப்பான் பூச்சி கட்சி அமைப்பின் சார்பில், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்ட களத்தை நோக்கி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு வருகின்றனர்.


















