
சென்னை: ஆக. 8-
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, கீழே விழுந்ததால் தலையில் அடிபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பாஜகவையும், தாமரை சின்னத்தையும் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்றவர் இல.கணேசன். தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்துள்ள இல.கணேசன், தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்டவர். பாஜகவில் இருந்தாலும், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுடன் நட்புடன் இருந்தவர்.
இவர் 2021ஆம் ஆண்டு மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதன்பின் மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பையும் சேர்த்துக் கவனித்து வந்தார். தொடர்ந்து 2023ஆம் ஆண்டு முதல் நாகாலாந்து ஆளுநராக செயல்பட்டு வருகிறார். அண்மையில் இல.கணேசன் தனது 80வது பிறந்தநாளினைக் கொண்டாடினார். சதாபிஷேக விழாவில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். இந்த நிலையில் சென்னையில் உள்ள வீட்டில் இல.கணேசன் தங்கி ஓய்வெடுத்து வந்தார். இன்று காலை திடீரென இல.கணேசனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இல.கணேசனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் இல.கணேசன் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாகவே அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பதும் தெரிய வந்துள்ளது.