
சென்னை: மே 12-
தமிழக சட்டப்பேரவையில் இந்த முறை அரங்கேறிய காட்சி, மக்கள் பார்த்து பழகிய தமிழக அரசியல் சூழலை அப்படியே தலைகீழாக மாற்றியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட 60 ஆண்டு காலமாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த திமுக மற்றும் அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்க, முதல்முறையாக தேர்தலை சந்தித்த தமிழக வெற்றிக் கழகம் ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்தது. அதிலும் குறிப்பாக, 1967-ம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்திருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை இல்லாததால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. இதனைத் தொடர்ந்து புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட கருப்பையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் பதவியேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தமிழக வெற்றிக் கழகம் அப்போது சட்டப்பேரவையில் இருக்கை ஒதுக்கீடு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஆளும் கட்சி வரிசையில் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்களுடன் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் அமர்ந்திருந்தனர். ஒரு காலத்தில் தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ், கடந்த பல ஆண்டுகளாக கூட்டணிக் கட்சியாக மட்டுமே இருந்து வந்தது. காங்கிரஸ் குறிப்பாக 1967 தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் திராவிட கட்சிகளின் எழுச்சி ஆரம்பமானது. அப்போது அண்ணாதுரை தலைமையிலான திமுக, காங்கிரஸை தோற்கடித்து முதன்முறையாக ஆட்சியை பிடித்தது. அந்த தேர்தல் தமிழக அரசியலின் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு காங்கிரஸ் மீண்டும் தமிழகத்தில் தனியாக ஆட்சியை பிடிக்க முடியவில்லை. திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதே அதன் அரசியல் நடைமுறையாக மாறியது.

















