காமராஜர் குறித்து திருச்சி சிவா பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. கண்டனம்

கரூர்: ஜூலை 17 –
சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி பேசும் போது, முன்னாள் முதல்வர் காமராஜர், குளிர்சாதன வசதி இல்லாமல் தூங்க மாட்டார் என்றும், உயிர் பிரியும் முன்பு, கருணாநிதியின் கைகளை பிடித்துக் கொண்டு நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற கூறியதாகவும் பேசியிருந்தார்.
இந்நிலையில், சிவா எம்.பி.யின் பேச்சுக்கு கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: முதல்வராக அரசினர் விடுதியில் தங்கியிருந்தபோது வெப்பம் அதிகமாக இருந்தால், மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர் காமராஜர். அவர் ஏ.சி இல்லாமல் தூங்க மாட்டார் என்று திருச்சி சிவா எம்.பி கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது.
காமராஜருக்கு எதிராக கடந்த காலத்தில் காழ்ப்புணர்ச்சியில் பரப்பப்பட்ட கட்டுக்கதைகளின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. காமராஜர் வாழ்ந்த வீட்டுக்கு காங்கிரஸ் கட்சி வாடகை கொடுத்து வந்தது. அது அவரது சொந்த மாளிகை என்பது போன்ற திமுக பரப்பிய கட்டுக்கதைகளாலேயே காமராஜர் தேர்தல் களத்தில் வீழ்த்தப்பட்டார் என்பது வரலாறு. காமராஜருக்கு எதிராக பரப்பப்படுகிற கட்டுக்கதைக ளுக்கு பதிலடி கொடுக்காமல் இருந்தால், காமராஜர் ஆன்மா நம்மை மன்னிக்காது என்று கூறியுள்ளார்.