
சிங்கப்பூர், மே 29- சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக் ஷயா சென் ஆகியோர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, 19-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் ரிகோ கன்ஜியுடன் மோதினார். 37 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-9, 21-12 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய், 14-ம் நிலை வீரரான சிங்கப்பூரின் லோகியான் யூவை எதிர்த்து விளையாடினார். 61 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 35-ம் நிலை வீரரான பிரனாய் 18-21, 21-16, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் 10-ம் நிலை வீரரான இந்தியாவின் லக் ஷயா சென், 2-ம் நிலை வீரரான தாய்லாந்தின் குன்லவுத் விதித் சரணுடன் மோதினார். இதில் லக் ஷயா சென் முதல் செட்டில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது காயம் காரணமாக குன்லவுட் விதித் சரண் விலகினார். இதனால் லக் ஷயா சென் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-15, 11-21, 21-18 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் லீ ஜெ-ஹுவே, யாங் போ-ஹுவான் ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிரஷ்டோ ஜோடி 8-21, 21-17, 21-16 என்ற செட் கணக்கில் ஜப்பானின் யுடா வதனாபே, மாயா தகுச்சி ஜோடியை தோற்கடித்து கால் இறுதி சுற்றில் கால்பதித்தது.





















