Home மாவட்டங்கள் பெங்களூர் லாரி மீது கார் பயங்கர மோதல்: 5 நண்பர்கள் பரிதாப சாவு

லாரி மீது கார் பயங்கர மோதல்: 5 நண்பர்கள் பரிதாப சாவு

சித்ரதுர்கா: மே 29-
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் மொளகால்மூரு தாலுகா துமகூர் ஹள்ளி மேம்பாலம் அருகே உள்ள ஸ்ரீனிவாசா தாபா முன்பாக நேற்று நள்ளிரவு பயங்கர சாலை விபத்து ஒன்று நேரிட்டது.
வேகமாகச் சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் டயர் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ரகு (வயது 40), ருத்ரேஷ் (36), பிரமோத் (35), சோமசேகரா (35) மற்றும் மல்லிகார்ஜுனா ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
பலியானவர்களில் பிரமோத் என்பவர் சள்ளகெரே நகராட்சியில் ஜே.டி.எஸ் கட்சி சார்பில் இரண்டு முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராகவேந்திரா என்பவர் புகைப்படக் கலைஞர் சங்கத்தின் இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்தவர்.
நெருங்கிய நண்பர்களான இவர்கள் 5 பேரும் நேற்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மொளகால்மூருவில் உள்ள தங்களது மற்றொரு நண்பரின் வீட்டுக்கு விருந்து சாப்பிடச் சென்றுள்ளனர். இரவு 9 மணியளவில் உணவருந்திவிட்டு மீண்டும் சள்ளகெரே நகருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்த போதுதான் இந்த அதிர்ச்சி மரணம் அவர்களைத் தழுவியுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மொளகால்மூரு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் லட்சுமண ஹொசபேட்டே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பலியானவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து மொளகால்மூரு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.