Home மாவட்டங்கள் பெங்களூர் முன்னாள் அமைச்சர் வெங்கடரமணப்பா காலமானார்:

முன்னாள் அமைச்சர் வெங்கடரமணப்பா காலமானார்:

துமக்கூர்/பாவகடா, மே 29- துமக்கூர் மாவட்டம் பாவகடா தாலுகாவின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வெங்கடரமணப்பா (வயது 80) இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.
வயது மூப்பு காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிர் பிரிந்தது.
முன்னாள் அமைச்சர் வெங்கடரமணப்பாவின் மனைவி சாரதம்மா, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். மறைந்த வெங்கடரமணப்பாவிற்கு தற்போதைய எம்.எல்.ஏ எச்.வி. வெங்கடேஷ் உட்பட இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
ஒரு சாதாரண தொண்டனாக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய வெங்கடரமணப்பா, படிப்படியாக வளர்ந்து அமைச்சராக உயர்ந்தவர். பாவகடா தொகுதி அரசியலில் தனக்கென ஒரு அழிக்க முடியாத முத்திரையைப் பதித்தவர்.பொன்னசமுத்ரா கிராமத்தில் முதன்முறையாக மண்டல பஞ்சாயத்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியல் களத்தில் குதித்த அவர், 4 முறை எம்.எல்.ஏ-வாகவும், 2 முறை அமைச்சராகவும் பணியாற்றி சாதனை படைத்துள்ளார். வீரேந்திர பாட்டீல் முதலமைச்சராக இருந்த போது, முதன்முறையாக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். எஸ்.எம். கிருஷ்ணா முதலமைச்சராக இருந்த காலத்தில், மீண்டும் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் சீட் கிடைக்காததால், அதிருப்தி வேட்பாளராக (சுயேச்சை) களம் இறங்கி விஸ்வரூப வெற்றி பெற்றார். அப்போது மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க அரசுக்கு ஆதரவு அளித்து, முதன்முறையாக அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சரானார். எடியூரப்பா அமைச்சரவையில் சிறுதொழில் மற்றும் பட்டுவளர்ச்சித் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
2018ல் மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார். பின்னர் அமைந்த எச்.டி. குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணி அரசில் 14 மாதங்கள் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
வெங்கடரமணப்பாவின் மறைவுக்கு முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், அமைச்சர்கள் டாக்டர் ஜி. பரமேஸ்வர், கே.என். ராஜண்ணா, எம்.எல்.ஏ-க்கள் டி.பி. ஜெயச்சந்திரா, கே. ஷடக்‌ஷரி, எஸ்.ஆர். ஸ்ரீனிவாஸ், டாக்டர் ரங்கநாத், சுரேஷ் கவுடா, ஜோதி கணேஷ், சுரேஷ் பாபு, எம்.டி. கிருஷ்ணப்பா உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.