
காட்பாடி: ஜூலை 16-
தி.மு.க., பொதுச்செயலரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் இல்ல விழாவில், கிலோ கணக்கில் நகை அணிந்து குத்தாட்டம் போட்ட தி.மு.க., பிரமுகரால் சர்ச்சை எழுந்துள்ளது.வேலுார் மாவட்டம், காட்பாடியில், தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகனின் பேத்தியும், கதிர் ஆனந்த் எம்.பி.,யின் மகளுமான செந்தாமரைக்கும், திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவி மகன் தீபக்கிற்கும் திருமண நிச்சயதார்த்தம், கடந்த 12ம் தேதி நடந்தது. இதில், தி.மு.க., – எம்.பி., கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள், நடிகர்கள் சரத்குமார், சதீஷ் உட்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர். விழாவில், மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் கதிர் ஆனந்த், தன் ஆதரவாளர்களுடன் சினிமா பாடலுக்கு நடனமாடினார். அவருடன், வேலுார் துணை மேயர் சுனில்குமார், காட்பாடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் உட்பட பலரும் நடனமாடினர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவுகிறது.
குறிப்பாக, கிலோ கணக்கில் தங்க நகைகள் அணிந்து நடனமாடிய, காட்பாடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். வேலுார் மாவட்டம், காட்பாடி தாலுகா, வள்ளிமலை பகுதியைச் சேர்ந்த வேல்முருகன், கோவில் திருவிழா, திருமண நிகழ்ச்சிகளில், கிலோ கணக்கில் தங்க நகைகள் அணிந்து வலம் வருவது வழக்கம்.தற்போது, துரைமுருகன் இல்ல விழாவில், நகைகளுடன் அவர் நடனமாடிய காட்சி, சமூக வலைதளத்தில் பரவி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, மதுரையைச் சேர்ந்த வரிச்சியூர் செல்வம், அரசியல் பிரமுகரான ஹரி நாடார் ஆகியோர் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து, அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி கைதானது குறிப்பிடத்தக்கது.













