
மதுரை: ஜனவரி 22 –
கீழடி அகழ்வாராய்ச்சியை மேற்கொண்ட இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் ராமகிருஷ்ணன், வரலாற்றை மாற்றும் அகழாய்வு அறிக்கைகளை வெளியிடுவதில் தடங்கல் இருப்பதாக கூறியுள்ளார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கி.மு. 300 -இல் தான் நமது சங்கக் காலமும், நாகரீகமும் தொடங்குகிறது என இன்று வரை வரலாற்று மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.
தமிழகத்தில் நடத்தப்பட்டிருக்கும் ஆய்வுகள் மூலம் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த ஆதாரங்கள் எல்லாம் வெளிப்படையாக வெளி உலகிற்கு தெரியாத காரணத்தாலேயெ நமது வரலாற்றை இன்றும் மாற்ற முடியாமல் இருக்கின்றோம். அது எப்போது மாறும்.. இதை மாற்ற முயற்சிப்பதாலேயே இவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறோம் என்று கூறினார்.
தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த நாகரீகங்கள் மற்றும் மக்களின் வாழ்க்கை முறைகள் பற்றிய உண்மைகளை வெளிக்கொணர அகழ்வாராய்ச்சிகளானது நடத்தப்படுகிறது. இதில் கீழடி, ஆதிச்சநல்லூர், கொற்கை போன்ற இடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் தமிழ்நாட்டின் தொன்மை நாகரீகத்தை வெளிக்கொணர்ந்துள்ளது.
இதில் கீழடியில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிக்கு இந்திய தொல்லியியல் ஆராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கியதோடு, பல்வேறு கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். ஆனால் இந்த அகழ்வாராய்ச்சியினை முழுமையாக முடிக்கும் முன்பே அவரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது மத்திய அரசு. இதுமட்டுமல்லாமல் அவர் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையினையும் மத்திய அரசு வெளியிடவில்லை. எழுத்து பிழையை மட்டுமே திருத்துவேன்.. அமா்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட அகழ்வாராய்சி அறிக்கையினை திருத்தி எழுதி சமர்பிக்குமாறு இந்திய தொல்லியியல் துறை கடிதம் அனுப்பியுள்ளது. இதற்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையில் எழுத்து பிழையை வேண்டுமானால் திருத்துவேன்.. உண்மையைத் திருத்த மாட்டேன் என்று பதில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தான் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் வரலாற்றை மாற்றும் அகழாய்வு அறிக்கைகளை வெளியிடுவதில் தடங்கல் இருப்பதாக கூறியுள்ளார்.
எவ்வளவோ ஆய்வுகள் நடந்து இருக்கின்றன. ஆனால் எதையும் அப்டேட் செய்யாமல் இருக்கிறோம். இதனை மாற்ற முயற்சிப்பதால்தான் இப்போது இவ்வளவு பிரச்சினைகள். உண்மை கருத்துகளை சொல்வது என்பதில் ஆணித்தரமாக உள்ளோம். என்னிடம் இருக்கும் ஆய்வறிக்கை வெளியே வந்தால்தான் உலகத்துக்கு தெரியும். ஆனால் அதை வெளியிடுவதில் பல தடங்கல்கள் ஏற்படுகின்றன. தொல்லியியலில் ஆதாரங்கள் கிடைக்கும் போதெல்லாம் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அது பல ஆய்வுகளுக்கு வழிவகுக்கின்றன.. “ எனத் தெரிவித்தார்.
















