Home மாவட்டங்கள் பெங்களூர் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

நீலகிரி, கூடலூர்: செப்.9-
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை சரிவர இல்லாததால், ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்து குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நிலவுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் நவம்பர் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டில் மழை அளவு குறைவாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மழை குறைவாகவே பெய்து வருகிறது. இதனால் முக்கிய ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்து, நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
குடிநீர் வழங்கும் பாண்டியாறு, மாயாறு, சோலாடி, பொன்னானி போன்ற முக்கிய ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்து, பாறைகள் வெளிப்படுகின்றன. இதனால், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் நாட்களின் இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நிலை நீடித்தால், பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படக்கூடும். எனவே, நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் பொதுமக்களை தங்களுக்குக் கிடைக்கும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளன. மழை இல்லாததால் ஆறுகள் வறண்டு வருவதால், கூடலூர் பகுதி மக்கள் பெரும் கவலையுடன் உள்ளனர்.