
பெங்களூர்: செப். 9-
பெங்களூரு யஷ்வந்த்பூர் காய்கறி சந்தைக்கு முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இன்று அதிகாலையிலேயே திடீர் விஜயம் செய்து அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு வந்திருந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அவர், விவசாயிகளுக்கு எவ்வித ஏமாற்றமும் நடக்கக்கூடாது என அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
கூட்டுறவு சங்க அதிகாரி சஸ்பெண்ட்:
ஆய்வின் போது, ஹிட்னாள் முதன்மை விவசாயக் கூட்டுறவு சங்கத்தில் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காமல் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் நேரில் புகார் அளித்தனர். உடனடியாகச் செயல்பட்ட முதலமைச்சர் டி.கே.சிவகுமார், சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கச் செயலாளரை பணியிடை நீக்கம் செய்ய அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டார்.
வெங்காய மூட்டை மீது அமர்ந்து கலந்துரையாடல்:
சந்தையில் விவசாயிகள் கொண்டு வந்திருந்த வெங்காய மூட்டைகளின் மீது அமர்ந்து இயல்பாகப் பேசிய முதலமைச்சர், அரசின் பஞ்ச உத்தரவாதத் திட்டங்கள் சரியான முறையில் போய் சேர்கிறதா, இலவச மின்சாரம் மற்றும் கிரகலக்ஷ்மி உதவித்தொகை கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார். தொடர்ந்து விவசாயிகள் மற்றும் பெண் வியாபாரிகளுடன் தரையில் அமர்ந்து இட்லி மற்றும் காபி சாப்பிட்டார். அப்போது உணவிற்காகத் தன் பாக்கெட்டிலிருந்து ₹500 எடுத்துக் கொடுத்து தொழிலாளர்களை நெகிழ வைத்தார்.
சுவாரசிய சம்பவம்:
ஆய்வின் போது ஒரு பெண் விவசாயியிடம் “இந்த உத்தரவாதத் திட்டங்களை யார் கொண்டு வந்தது?” என முதல்வர் கேட்க, அப்பெண்மணி “சித்தராமையா கொண்டு வந்தார்” என்றார். “நான் யார் தெரியுமா?” என டி.கே.சிவகுமார் சிரித்தபடியே கேட்க, “யார் என்று தெரியவில்லை சாமி!” என அப்பெண் வெள்ளந்தியாகக் கூறினார். எனினும், “நான் இந்திராகாந்தி காலத்திலிருந்தே காங்கிரஸுக்குத் தான் வாக்களிக்கிறேன்” என அவர் கூறியதும் முதல்வர் புன்னகைத்தார்.
இடைத்தரகர்களுக்கு எச்சரிக்கை:
65 கிலோ எடையுள்ள மூட்டைக்கு 55 கிலோ என்று கணக்கிட்டு இடைத்தரகர்கள் ஏமாற்றுவதாக விவசாயிகள் கொதிப்புடன் தெரிவித்தனர். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த முதலமைச்சர், “விவசாயிகளின் விளைபொருட்களுக்குச் சரியான விலை கொடுத்து நேர்மையாக வாங்க வேண்டும், ஏமாற்ற நினைத்தால் கடும் நடவடிக்கை பாயும்” என வியாபாரிகளுக்குக் கட்டளையிட்டார்.
மேலும், குடிநீருக்கே ₹20 செலவு செய்ய வேண்டியிருப்பதாகவும், பழைய அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளதாகவும் வந்த புகார்களைத் தொடர்ந்து, சந்தையில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளும் விரைவில் சரி செய்யப்படும் என விவசாயிகளுக்கு உறுதியளித்தார்.












